துருக்கி நிலநடுக்கத்தை முன்பே உணர்த்திய பறவைகள்..3 நாட்களுக்கு முன் ட்வீட் பதிவிட்ட ஆராய்ச்சியாளர்
துருக்கி நாட்டில் மிகப்பெரிய இயற்கை பேரழிவு ஏற்படப்போகிறது என்பதை பறவைகள் கூட்டம் உணர்த்தியுள்ளது.
அங்காரா: துருக்கி நாட்டில் திங்கட்கிழமை அதிகாலையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய இயற்கை பேரழிவினை பறவைகள் கூட்டம் முன்னதாகவே உணர்த்தியுள்ளன. அதே போல மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று 3 நாட்களுக்கு முன்னதாகவே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் டச்சு ஆராய்ச்சியாளர். அவரது ட்வீட் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே புரட்டிப்போட்டுள்ளது. கட்டிட இடிபாடுகள் கான்கிரீட் குவியல்களாக காணப்படுகின்றன. உடமைகளையும், வீடுகளையும் தொலைத்தவர்கள் வீதிக்கு வந்துள்ளனர். துருக்கி,சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிகப்பெரிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் காசியான்டேப் சிரியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அந்த நகரம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. ஓங்கி உயர்ந்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மணல் மேடுகளாக மாறியுள்ளன.
தொடர் நிலநடுக்கங்கங்களால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சிதைந்து போயின. நகரமே உருக்குலைந்து போயியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலர் மண்ணோடு மண்ணாக புதைந்து உயிரிழந்துள்ளனர். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி, சிரியா என இரண்டு நாடுகளுமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் துருக்கியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பொதுவாக மிகப்பெரிய துயரம் ஏற்படும் முன்பாக அதை இயற்கையானது உணர்த்தும். பறவைகள், விலங்குகளுக்கு இயற்கை பேரிடர் முன்கூட்டியே தெரியவரும்.
இந்நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலநடுக்கம் ஏற்படும் முன்னர் பறவைகள் காசியான்டேப் சுற்றி வட்டமடித்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நிலநடுக்கத்தை உணர்த்தவே பறவைகள் அவ்வாறு பறந்து திரிந்ததாக சமூக வலைதளத்தில் பலரும் கருத்து பதிவிட்டனர்.

இதனிடையே, டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் துருக்கி, சிரியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்படப்போகிறது என்று மூன்று நாட்களுக்கு முன்பு கணித்திருக்கிறார் . ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் என்ற அந்த ஆராய்சியாளர், துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே கணித்து அதை பிப்ரவரி 3ம் தேதி ட்வீட் செய்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் "மத்திய மற்றும் தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வரைபடத்துடன் கூறியிருக்கிறார். அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications