அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்.. ஏவுகணை தாக்குதல் குறித்து ஈரான் மூத்த தலைவர் பகீர் பேச்சு!
தெஹ்ரான்: ஏவுகணை தாக்குதல் நடத்தி அமெரிக்காவின் முகத்தில் அறைந்திருக்கிறோம் என ஈரானின் மூத்தமத தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்கா கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் ஈரான் படை தளபதி கொல்லப்பட்டார்.
இதனால் அமெரிக்கா மீது கொதிப்பில் உள்ளது ஈரான். இந்நிலையில் அமெரிக்காவின் அந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

80 வீரர்கள் பலி
நேற்று நள்ளிரவுக்கு பிறகு சுமார் 12 ஏவுகணைகளை ஏவி சரமாரி தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க படையை சேர்ந்த 80 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு அறை
இந்நிலையில் ஈரானின் மூத்த மத தலைவரான அயதுல்லா அலி காமெனி அந்நாட்டு தொலைக்காட்சியில் நேரலையில் பேசினார். அப்போது ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புத் தளங்களில் தாக்குதல் நடத்தி அமெரிக்காவின் முகத்தில் இஸ்லாமிய குடியரசு அறைந்திருப்பதாக அவர் கூறினார்.

பழி தீர்க்கப்படும்
நேற்று இரவு இந்த அறை வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார். கடந்த வாரம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஈரானிய இராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு கடுமையாக பழி தீர்க்கப்படும் என சபதம் செய்தார் காமெனி.

போதுமானதாக இல்லை
இந்நிலையில் ஏவுகணை தாக்குதல் குறித்து காமெனி இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு முக்கியமான சம்பவம் நடந்துள்ளது. அந்த விவகாரத்தில் ராணுவத்தின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று சுலைமானி கொலை குறித்து தெரிவித்தார் காமெனி.

பிரபலமான தலைவர்
இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஊழலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே முக்கியமானது என்றும் அயதுல்லா அலி காமெனி தெரிவித்தார். ஈரானின் பிரபலமான தலைவர்களில் சுலைமானியும் ஒருவராக இருந்தார்.

அதிகாலையில் அடக்கம்
ஈரானின் பல முக்கிய நகரங்களில் நடைபெற்ற இறுதி ஊர்வலங்களுக்குப் பிறகு புதன்கிழமை அதிகாலை அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications