அப்படி போடு.. ஏன் மாஸ்க் போடவில்லை?.. எடுங்க பணத்தை.. மாஸ்க் அணியாத பிரதமருக்கு ரூ.14,000 அபாரதம்!
பாங்காங்க்: கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. முதல் அலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை பாடாய்படுத்தியது. 2-வது அலையில் இந்தியாவை அலற வைத்து வருகிறது.
என்னதான் தடுப்பூசிகள் வந்தாலும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கொரோனவை ஒழிக்க முடியாது என்று மருத்துவர்களின் உரத்த கூற்றாக உள்ளது.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம், வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாஸ்க் அணியாத சாதாரண மக்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதை பார்த்து இருக்கிறோம். ஆனால் மாஸ்க் அணியவில்லை என்று கூறி ஒரு நாட்டின் பிரதமருக்கே அபராதம் போடப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்திலும் கொரோனா தனது வேலையை காட்டி வருகிறது. இதனால் அங்கு மாஸ்க் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான்- ஓச்சா நேற்று முன்தினம் தலைநகர் பாங்காக்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்றபோது மாஸ்க் அணியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ''எங்களுக்கு ஒரு நியாயம், பிரதமருக்கு ஒரு நியாமா?'' என்று மாஸ்க் அணியாத பிரதமரின் படத்தை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் பொங்கி எழுந்தனர். இதனை தொடர்ந்து பாங்காக் மாகாண கவர்னர் அஸ்வின் குவான் முவாங், மாஸ்க் அணியாத பிரதமருக்கு 190 டாலர்கள்(ரூ. 14,270) அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். ''நாட்டின் சட்டத்தை மதிக்காவிட்டால் பிரதமராக இருந்தாலும் அது குற்றமே. இதனால்தான் அபராதம் விதிக்கப்பட்டது' என்றார் கவர்னர் அஸ்வின் குவான்முவாங்.












Click it and Unblock the Notifications