ஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு-13 பேர் பலி
காந்தகார்: ஆப்கானிஸ்தானில் நேற்று மீண்டும் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 13 பேர் பலியாகியுள்ளனர்.இச்சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
இது அதிபர் தேர்தல் முடிந்த பிறகு நடந்த முதல் மிகப்பெரிய குண்டுவெடிப்பாகும்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிபர் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தனர். ஆனால், இரண்டு நாளுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் எந்த தாக்குதலும் நடைபெறவில்லை.
இந்நிலையில், மாய்வந்த் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் இருந்து காந்தகார் நகரத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு பயணிகளுடன் ஒரு டிரக் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, சாலையோரம் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டை தீவிரவாதிகள் "ரிமோட் கண்ட்ரோல்" மூலம் வெடிக்கச் செய்தனர். இதில் டிரக் தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது. அதில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒரு பெண் மற்றும் குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
பொதுமக்களைக் கொல்வதற்கு தலிபான்கள் இதுபோன்று சாலையோரத்தில் குண்டுகளை பதுக்கி வைத்து வெடிக்கச் செய்வது ஆப்கனில் தொடர்ந்து நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.இதனால்,உயிர்பலி அங்கு அதிகரித்து கொண்டே வருகிறது.












Click it and Unblock the Notifications