எங்கே தாடி? தொழுகையை காணோமே? சினிமா CD விற்றீர்களா? தாலிபான்களால் திணறும் ஆப்கானிஸ்தான்
காபூல்: இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட 13,000க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆப்கன் அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலானது, மிகுந்த கவனத்தை உலக நாடுகளிடம் ஏற்படுத்தி வருகிறது.
ஆப்கனில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகிறார்கள்.. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியே நடமாடக்கூடாது, அப்படியே வெளியே வந்தாலும், வீட்டு ஆண்களின் துணையுடன் தான் வரவேண்டும்..

மாணவிகளுக்கு உயர்நிலை பள்ளிகளில் அனுமதி மறுப்பு, தொடக்க பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக வகுப்புகள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள்: பூங்காக்களிலும் ஆண், பெண்கள் தனித்தனியே செல்ல வேண்டும், அதாவது, வாரத்தின் 3 நாட்கள் பெண்களுக்கும், வார இறுதி நாட்கள் உள்பட 4 நாட்கள் ஆண்களும் பூங்காக்களுக்கு செல்லலாம். திருமணமான தம்பதிகள் ஒரே குடும்பத்தினராக இருந்தாலும் அவர்கள் சேர்ந்து பூங்காவுக்கு செல்ல முடியாது.
அதேபோல, ஆண் டாக்டர்களிடம் பெண்கள் சிகிச்சைக்கு செல்லக்கூடாது என்று தாலிபான்களின் கண்டிஷன்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. விமான பயணங்களிலும் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, அரசு ஊழியர்களுக்கும், புதிய உத்தரவு ஒன்றினை தாலிபன்கள் பிறப்பித்திருந்தனர்.. அதன்படி "அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தாடியை ஷேவ் செய்ய கூடாது... அவர்கள் தாடியுடன், நீண்ட தளர்வான சட்டை, பேண்ட்டுடன் (பைஜாமா, ஜிப்பா) முஸ்லிம்களுக்கான தொப்பி, டர்பன் அணிந்து கொண்டுதான், ஆபீஸில் வேலை பார்க்க வேண்டும்.. சரியான நேரத்தில் தொழுகை மேற்கொள்ள வேண்டும்" எனவும் கூறப்பட்டது.
தொழுகை நேரம்: அதாவது, சரியான காரணமின்றி தொழுகையை தவறவிட்ட ஊழியர்கள் எச்சரிக்கையைப் பெறுவார்கள் என்றும், மீண்டும் மீண்டும் குற்றங்கள் செய்தால் தண்டனை கிடைக்கும் என்றும் அவர்களது ஆணையில் கூறப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்ல, தாடியை "கண்காணிப்பதற்கென்றே" நல்லொழுக்க பரப்பல் அமைச்சகத்தின் பிரதிநிதிகள் அரசு அலுவலக நுழைவு வாயில்களிலேயே நின்று கண்காணித்து வருவதாகவும், இதை பின்பற்றாதவர்களுக்கு அரசு அலுவலகங்களுக்குள் அனுமதி மறுக்கப்படுவதுடன், அவர்களின் பணியும் பறிக்கப்படும் நிலைமை உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன..
தாலிபான்கள்: ஆப்கனில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கெல்லாம் உலக நாடுகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.. இந்த தாடி விவகாரங்களுக்கும் அப்போது எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது.. இதற்கு தாலிபான்கள் விளக்கம் ஒன்றை தந்திருந்தனர்.. அதில், "இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப பொதுமக்களின் அனைத்து உரிமைகளுக்கும் மதிப்பளித்து வருகிறோம்'' என்று கூறியிருந்தது.
இந்நிலையில், தலிபான் ஆட்சிக்காலத்தில் கடந்த ஒருவருடத்தில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்பற்றி, அங்குள்ள அறநெறி அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் சட்டமாக்கல் பிரிவு இயக்குனர் மோஹிபுல்லா மோஹாலிஸ் கூறியதாவது:
தாடி எங்கே?: "இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட 13,000க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 21,328 இசைக்கருவிகள் அழிக்கப்பட்டன... ஒழுக்கநெறி தவறிய திரைப்பட CD க்களை சந்தையில் விற்பனை செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு தாடி வளர்க்காத 281 வீரர்கள், பாதுகாப்புப் படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்"என்று தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி: இந்த தகவலானது, மிகப்பெரிய அதிர்வலையை ஆப்கனில் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், கலைக்கப்பட்ட பெண்கள் அமைச்சக வளாகம், அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டிருக்கிறது. பெண்களுக்கேற்ப ஆடை அணியவில்லை என்பதற்காக பல பெண்கள் கைது செய்யப்பட்டு, பல மணிநேரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என ஆப்கானிஸ்தானில் உள்ள ஐநா சபையின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.. ஆனால், தாலிபன் அரசு இந்த குற்றச்சாட்டுகளை "அடிப்படையற்றது" என்று குறிப்பிட்டு மறுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications