15 மனைவிகள், 30 பிள்ளைகள்.. 100 வேலையாட்களுடன் யுஏஇ வந்த நபர்..அபுதாபியை அதிரவைத்த ஆப்பிரிக்க மன்னர்
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி விமான நிலையத்திற்கு 15 மனைவிகள், 30 பிள்ளைகள், பணியாட்கள் 100 பேருடன் தனி விமானத்தில் வந்திறங்கிய ஆப்பிரிக்க - அமெரிக்க நபரால் ஏர்போர்ட்டில் மூன்று முனையங்கள் சிறிது நேரம் மூடும் நிலை ஏற்பட்டதாம். இவ்வளவு படை பரிவாரங்களோடு வந்தது யார் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. சுற்றுலா பயணிகள், பெரும் தொழில் அதிபர்கள் வருகை என எப்போதும் பிசியாக காணப்படும் அபுதாபி விமான நிலையத்தில் அண்மையில் பெரும் களேபரமே ஏற்பட்டது என சொல்லும் அளவிற்கு ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

15 மனைவிகள், 30 பிள்ளைகள்
ஆப்பிரிக்க - அமெரிக்க நபர் ஒருவர் தனது 15 மனைவிகள், 30 பிள்ளைகள், 100 பணியாட்களுடன் அபுதாபி வந்ததால் ஏர்போர்ட்டில் மூன்று முனையங்கள் சிறிது நேரம் மூடும் நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு மிக்க ஐக்கிய அரபு அமீரகத்திலேயே விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நபர் யார்? என்ற விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பெரும் விவாதத்தையே ஏற்படுத்திவிட்டது.
இவ்வளவு படை பரிவாரங்களோடு வந்தது யார்தான் என்று யோசிக்கிறீர்களா? இது பற்றிய விவரங்கள் வருமாறு:-
அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய அந்த நபர் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடு ஒன்றின் மன்னராம். ஸ்வாசிலண்ட் என்று முன்பு அழைக்கப்பட்ட எஸ்வதினி Eswatini - என்ற நாட்டின் மன்னர் எம்ஸ்வட்டி III என்பவர்தான் இப்படி அபுதாபி விமான நிலைய பயணிகளை வியக்க வைக்கும் வகையில் பிரமாண்டம் காட்டியிருக்கிறார்.
ஏன் அபுதாபிக்கு வந்தார்
தென் ஆப்பிரிக்க கண்டத்தில் முடியாட்சி நடைபெறும் கடைசி நாடாக இது அறியப்படுகிறது. தனி விமானத்தில் அபுதாபிக்கு வந்த மன்னர் எம்ஸ்வடி III, தனது மனைவிகள் 15 பேர் மற்றும் 30 பிள்ளைகள் சுமார் 100 உதவியாளர்கள் என ஒரு ஊரையே அழைத்து வந்தது போல படை பரிவாரங்களோடு வந்து இறங்கியதுதான் அங்கு பெரிய அளவில் பேசு பொருளானது.
ஒரே நேரத்தில் மன்னர் தனது குடும்பங்கள் மற்றும் உதவியாளர்கள் என நூற்றுக்கணக்கில் வந்ததால், நிலைமையை சமாளிக்க தற்காலிக லாக்டவுனும் விமான நிலையத்தில் போடப்பட்டு உள்ளது. சரி.. இத்தனை பேரை அழைத்துக்கொண்டு ஏன் திடீரென அவர் அபுதாபிக்கு வந்தார் என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். ஐக்கிய அரபு அமீரக நாட்டுடன் பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவர் வருகை தந்ததாக சொல்லப்படுகிறது.
ஆப்பிரிக்க பாரம்பரிய உடை
மன்னர் எம்ஸ்வடி III ஆடம்பரமான லைஃப் ஸ்டைல் அவ்வப்போது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் பரவும் அந்த வீடியோவில், மன்னர் எம்ஸ்வதி பாரம்பரிய சிறுத்தை வண்ண உடையை அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அவரது மனைவிகள் வண்ணமயமான ஆப்பிரிக்க ஆடைகளை அணிந்துள்ளனர்.
அவரது 100 பேர் கொண்ட குழுவினர் மன்னர் குடும்பத்தினரின் உடமைகள் மற்றும் தளவாடங்களை கையாள்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆப்பிரிக்க பாரம்பரிய உடையை அவர்கள் அணிந்தபடி சென்ற காட்சிகள் வலைத்தளங்களில் வைரல் ஆகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் புது மணப்பெண்
மன்னர் எஸ்வதிக்கு மொத்தம் 30 மனைவிகள் உள்ளனராம். அவர்களில் 15 பேர் மட்டுமே தற்போது உடன் இருக்கிறார்கள். 1986 முதல் எசுவாத்தினி நாட்டை ஆட்சி செய்து வருகிறார், உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது நிகர மதிப்பு $1 பில்லியனுக்கும் அதிகமாகும். இவரை பற்றிய சர்ச்சைகளும் அதிக அளவில் அடிபடுகின்றன.
அதாவது, ஒவ்வொரு ஆண்டும் புதிய மணப்பெண்ணை தேர்வு செய்யும் பழக்கத்தை இவர் வைத்துள்ளாராம். அந்நாட்டு பாரம்பரிய நடனமான ரீட் டேன்ஸ் நிகழ்ச்சியின் போது, தேர்வு செய்வாராம். மன்னரின் இந்த பழக்கத்திற்கு கடும் விமர்சனங்களும் உள்ளன. எசுவாத்தினி நாட்டில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். மக்கள் வறுமையில் வாழும் நிலையில், மன்னரின் ஆடம்பர வாழ்க்கை முறைக்கு கடுமையான விமர்சனங்களும் உள்ளன.












Click it and Unblock the Notifications