கனடாவில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தியது அரசு
ஒட்டாவா: கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அந்நாட்டு அரசு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது கனடாவில் தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தினை உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் இந்தியர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு காரணங்களுக்காக கனடாவில் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். கனடாவில் வசித்து வரும் வெளிநாட்டவர்களில் கணிசமானவர்கள் இந்தியர்கள் ஆவர்கள். இந்த நிலையில் தான் கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கனடா அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது.

சம்பளம் உயர்வு
அதாவது, கனடாவில் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 17.30 டாலரில் இருந்து, 17.75 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. கனடாவின் பெடரல் அமைப்பால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட தனியார் துறையில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இதனால் சம்பளம் அதிகரிக்க உள்ளது. கனடாவில் வாழ்க்கை செலவுகள் கடுமையாக உயர்ந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இத்தகைய சூழலில் தான் அடிப்படை சம்பளத்தை உயர்த்தி கனடா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கனடா வேலை வாய்ப்பு துறை அமைச்சர் கூறியதாவது:- கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டு இருப்பது கனடா தொழிலாளர்கள் மற்றும் தொழில்களுக்கு நிலைத்தன்மை மற்றும் நிச்சயத்தன்மையை அளிக்கும். ஊதிய சமநிலையை கொடுப்பதோடு, நியாயமான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு ஒரு படி நெருக்கமாக நம்மை முன்னெடுத்து சென்றுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
விலைவாசி பிரச்சினை
புதிய சம்பள உயர்வுப்படி ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படுகிறது. கனடாவின் வருடாந்திர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டை கணக்கிட்டு அளிக்கப்படுகிறது. கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியின் போது விலை வாசி உயர்வுதான் மிக முக்கிய பிரச்சினையாக இருந்தது.
கனடா பொதுத்தேர்தலிலும் விலைவாசி பிரச்சினை முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்று கருதப்படும் நிலையில்தான், இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 3.7 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். கனடா அரசு அறிவித்துள்ள சம்பள உயர்வுக்கு அங்குள்ள இந்தியர்களுக்கு பெரிதும் பலனளிக்கும் எனக் கூறப்படுகிறது.
22 சதவீதம் பேர் இந்தியர்கள்
2024 கணக்கீட்டின்படி, கண்டாவில் தற்காலிக பணி மற்றும் கிக் பொருளாதாரத்தில் பணியாற்றுபவர்கள் 22 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். கனடாவில் பணி செய்பவர்கள் மட்டும் இன்றி இந்திய மாணவர்களும் இதனால் பயன்பெறுவார்கள். ஏனெனில் ஊழியர்களுக்கு மட்டும் இன்றி இண்டெர்ன் பயிற்சி எடுப்பவர்களுக்கும் இது பொருந்தும் என்பதால் மாணவர்களும் பயன் அடைவார்கள்.












Click it and Unblock the Notifications