உலக அமைதியின் எதிரி.. பனிப்போர் திட்டம்.. அமெரிக்க வெளியுறவு செயலருக்கு எதிராக கொந்தளிக்கும் சீனா
பீஜிங்: உலக அமைதியின் எதிரி என்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவை கடுமையாக விளாசியுள்ளது, சீன நாட்டு அரசு நாளிதழ்.
கொரோனா பரவலை சீனா கையாண்டதை பார்த்து, அமெரிக்கர்கள் கோபத்தில் இருப்பதாக, அந்த நாட்டு வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். மேலும் சீனா தக்க விலை கொடுக்க வேண்டி வரும் என்றும், அவர் எச்சரித்தார்.
"தங்களிடமிருந்த தகவல்களை வெளியே சொல்லாமல், சீனா மறைத்தது. அதனால், மிகுந்த வேதனையையும், உயிர் இழப்பையும், உலகப் பொருளாதாரத்திற்கு இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது" என்று பாம்பியோ கூறினார்.

விளாசல்
"இது ஒரு தொடர்ச்சியான சவாலாகும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் உலக சுகாதார அமைப்பும் தங்கள் நாட்டிற்குள் ஒரு தொற்றுநோய் பரவியதை தடுக்காமலும், தகவலை பகிர்ந்து கொள்ளாமலும், தங்கள் பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டனர்" என்றும் அவர் கூறியிருந்தார்.

சீனா கண்டனம்
மைக் பாம்பியோ கருத்துக்கு, சீனா இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாம்பியோவின் கருத்துக்களுக்கு நேற்று பதிலடி கொடுத்த சீன அரசு ஊடகம், குளோபல் டைம்ஸ், பாம்பியோ 'சீன அரசியல் அமைப்பு மீதான தனிப்பட்ட வெறுப்புடன் இருக்கிறார். எனவே அமெரிக்காவுடனான உறவை கெடுக்கிறார்' என்று தெரிவித்துள்ளது.

மோதல்
அமெரிக்காவின் தலைமை தூதராக இருந்தபோதிலும், சர்வதேச புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கு தரப்பட்ட அடிப்படை பொறுப்பை அவர் முற்றிலும் மீறிவிட்டார். உலக அமைதிக்கு எதிரியாகிவிட்டார். மைக் பாம்பியோ நெருப்புடன் விளையாடுகிறார். 21 ஆம் நூற்றாண்டை இரு பெரும் நாடுகளுக்கு நடுவேயான மோதலாகவும், அமைதிக்கான அஸ்திவாரங்களை ஆட்டிக் கொண்டிருக்கிறார்.
Recommended Video

அரசியல் எடுபடாது
புவிசார் அரசியல் இனி உலகில் ஆதிக்கம் செலுத்த முடியாது. பாம்பியோவும் அவரைப் போன்றவர்களும் உலகை பின்னோக்கி இழுக்கிறார்கள். அவர்கள் ஒரு மாறுபட்ட புதிய நூற்றாண்டைக் கையாள முடியவில்லை, எனவே அவர்கள் பனிப்போரை மீண்டும் தொடங்க முயற்சிக்கின்றனர். இரு துருவப்படுத்தப்பட்ட மோதலில் மட்டுமே அவர்கள் தங்கள் லட்சியத்தை அடைய முடியும் என நினைக்கிறார்கள். இவ்வாறு சாடியுள்ளது சீன ஊடகம்.












Click it and Unblock the Notifications