தென் ஆப்பிரிக்காவில் மதுபான பாரில் ஷாக்.. கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு.. 11 பேர் உயிரிழப்பு
பிரிட்டோரியா : தென் ஆப்பிரிக்காவின் நிர்வாக தலைநகரமான பிரிட்டோரியாவில், தனியார் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவத்தை தென் ஆப்பிரிக்க காவல்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் எதனால் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது என்பது குறித்து விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை.
தென் ஆப்பிரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிரிட்டோரியா, அந்த நாட்டின் நிர்வாக தலைநகரம் ஆகும். இந்த நகரின் மேற்கே உள்ள அட்டரிட்ஜ்வில்லி பகுதியில் உள்ள சால்ஸ்வில்லி என்ற தனியார் விடுதிக்குள், தென்னாப்பிரிக்கா நேரப்படி அதிகாலை 4.15 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ஆனால் இந்த சம்பவம் தென்னாப்பிரிக்க நேரப்படி அதிகாலையில் நடந்த நிலையில், காலை 6 மணிக்குத்தான் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 25 பேரை கண்மூடித்தனமாக மர்ம கும்பல் சுட்டுள்ளது.. இவர்களில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 11 பேரில், 3 வயது மற்றும் 12 வயததில் சிறுவர்கள் மற்றும் 16 வயது பெண் ஒருவர் என மூன்று பேர் சிறுவர்கள் ஆவார்.
இந்தச் சம்பவம் நடந்த இடம், சட்டவிரோத மதுபானங்களை செய்யும் பார் என்று போலீசார் கூறினார்கள். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடனேயே போலீசார் விரைந்து சென்றுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் மற்றும் வெடிமருந்து நிபுணர்கள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து தென் ஆப்பிரிக்க காவல்துறையின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் அத்லேந்தா மாதே கூறுகையில், "அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியுடன் அந்த விடுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர், மது அருந்திக் கொண்டிருந்தவர்களை நோக்கித் தொடர்ச்சியாகச் சுட்டனர். இதில் 11 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளோம்.
சட்டவிரோதமாகச் செயல்படும் மது விற்பனை நிலையங்களே இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, நாடு முழுவதும் 11,975 உரிமம் இல்லாத மதுக் கடைகளை நாங்கள் (அரசு) மூடியிருக்கிறது. சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 18,676 பேரைக் கைது செய்திருக்கிறோம்.
முன்னதாக கடந்த மாதம் மட்டும் கேப் டவுன் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். கேப் டவுன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் போன்ற முக்கிய நகரங்களில் சமீப காலமாகத் துப்பாக்கிச் சூடு மற்றும் கும்பல் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பது தென் ஆப்பிரிக்காவுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications