Gen Z இளைஞர்கள் கட்சி படுதோல்வி.. வங்கதேசத்தில் அடித்து தூக்கிய பிஎன்பி! பிரதமராகும் தாரிக் ரஹ்மான்
டாக்கா: வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தற்போது வரை அங்கு தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதே டிரெண்ட் தொடர்ந்தால் அக்கட்சி மாபெரும் வெற்றியைப் பெறும். அதேநேரம் மாணவர் புரட்சியில் உருவான என்சிபி கட்சி மோசமான நிலையில் உள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024ல் ஹசீனா அரசுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. அது புரட்சியாக மாறிய நிலையில், ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உருவானது. இந்தச் சூழலில் தான் அங்கு நேற்று பிப்ரவரி 12ம் தேதி தேர்தல் நடந்தது.

வங்கதேச தேர்தல்
அங்கு இத்தனை காலமாக ஆளும் கட்சியாக இருந்த ஹசீனாவின் ஆவாமி லீக் இந்த தேர்தலில் பங்கேற்கவில்லை. அக்கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் மற்ற கட்சிகள் மட்டுமே போட்டியிட்டன. அங்கு வாக்குப்பதிவின் போது ஒரு சில இடங்களில் வன்முறை ஏற்பட்ட போதிலும், பெரும்பாலும் சிக்கலின்றித் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் 55%க்கு மேல் வாக்குப்பதிவு பதிவானது. அங்கு நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது.
முதற்கட்ட முடிவுகளின்படி தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அதிலும் ரஹ்மானின் பிஎன்பி கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றே தெரிகிறது. அங்கு மொத்தம் 299 தொகுதிகள் இருக்கும் சூழலில் இந்திய நேரப்படி காலை 7.30 மணியளவில் 194 தொகுதிகளில் முடிவுகள் வெளியாகி இருந்தது. அதில் 149 இடங்களில் பிஎன்பி கூட்டணி வென்றுள்ளது. மாணவர் புரட்சியில் உருவான என்சிபி கட்சி மற்றும் அதன் கூட்டணி வெறும் 39 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதே டிரெண்ட் தொடர்ந்தால் பிஎன்பி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.
தாரிக் ரஹ்மான்
அதில் நெற்கதிர் சின்னத்தில் போட்டியிட்ட பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் 2,16,284 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து தராசு சின்னத்தில் போட்டியிட்ட ஜமாத்-இ-இஸ்லாமியை சேர்ந்த அபிதூர் ரஹ்மான் சோஹல் 97,626 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன் மூலம் ரஹ்மான் 1,18,658 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை முழுமையாக அனைத்துத் தொகுதிகளிலும் முடிய வெள்ளிக்கிழமை நண்பகல் ஆகிவிடும் எனத் தெரிகிறது. அதேநேரம் வெள்ளி அதிகாலையே யார் அங்கு ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற டிரெண்ட் உறுதியாகிவிடும்.
அடுத்து என்ன நடக்கும்
வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிந்ததும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதன் பிறகு 3-4 நாட்களில், புதிய அரசிடம் முகமது யூனின் இடைக்கால அரசு அதிகாரத்தை ஒப்படைக்கும் எனத் தெரிகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்த பிறகு, பெரும்பான்மை கட்சித் தலைவர் வங்கதேசத்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்பார். பிப்ரவரி 17 அல்லது 18க்குள் இந்த அனைத்து பிராசஸும் முடியும் எனத் தெரிகிறது.
யார் இந்த தாரிக்?
60 வயதான தாரிக் ரஹ்மான், வங்கதேசத்தின் புதிய பிரதமராக உருவெடுத்துள்ளார். இவர் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் ஆவார். ஊழல் புகாரில் 2007ல் கைதாகி இருந்த ரஹ்மான், பிறகு சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார். அப்போது உடல்நலனைக் காரணமாகச் சொல்லி வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார். சுமார் 17 ஆண்டுகள் லண்டனில் வசித்த ரஹ்மான் 2025 டிசம்பர் தான் வங்கதேசம் திரும்பினார். தாய் கலீதா ஜியாவிடமிருந்து கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவர், 3 மாதங்களில் கட்சியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அவர் கடந்த 2025 ஜூன் 13ம் தேதி இங்கிலாந்துக்குச் சென்ற வங்கதேச இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸை சந்தித்தார். அதைத் தொடர்ந்து நீண்ட யோசனைக்கு பிறகே 2025 டிசம்பர் 25ம் தேதி வங்கதேசம் திரும்பினார். தனது மனைவி ஜுபைதா ரஹ்மான் மற்றும் மகள் ஜைமா ரஹ்மான் ஆகியோருடன் நாடு திரும்பினார். ரஹ்மான் நாடு திரும்பிய 5 நாட்களில் அவரது தாயார் உயிரிழந்தார். இதனால் பிஎன்பி கட்சியை வழிநடத்தும் பொறுப்பு ரஹ்மான் வசம் வந்தது.












Click it and Unblock the Notifications