வங்கதேசத்தில் இந்து தொழிலதிபர் மீது கொலைவெறி தாக்குதல் - பெட்ரோல் ஊற்றி தீவைத்த கொடூரர்கள்
டாக்கா: வங்கதேத்தில் கடந்த சில வாரங்களாக இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் அங்கு 3 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு மற்றொரு இந்து மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பணி முடிந்து வீடு திரும்பியவரை ஒரு கும்பல் கடுமையான ஆயுதங்களால் தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அந்த நபர் குளத்தில் குதித்துள்ளார். இந்த சம்பவம் வங்கதேச சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் நாட்டில் கடந்த 2 வருடங்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. கடந்த 2024 வருடம் அந்த நாட்டில் ஏற்பட்ட வன்முறை உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த நாட்டின் அதிபராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சியை இழந்து, இந்தியாவில் தலைமறைவானார். இப்போதுவரை அங்கு முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை.

வங்கதேசம் இந்துக்கள் தாக்குதல்
போராட்டங்கள், வன்முறை, சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் என்று வங்கதேசத்தில் தொடர்ந்து அமைதியின்மை நிலவி வருகிறது. அங்கு கடந்த மாதம் மாணவர் அமைப்பின் தலைவர் ஒஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்டார். இது அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் அங்குள்ள சிறுபான்மையினரான இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே அங்கு கடந்த 2 வாரங்களில் 3 இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர். திபு சந்திரதாஸ், அமிரித் முந்தால், பஜேந்திர பிஸ்வாஸ் 3 இந்து இளைஞர்களை மாணவர் அமைப்பினர் கொலை செய்தனர். இது வங்கதேசத்தில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் வங்கதேசத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
தாக்குதல், பெட்ரோல் ஊற்றி எரிப்பு
வங்கதேச மாநிலம் ஷரியத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகன் தாஸ் (வயது 50). இவர் அங்கு சொந்தமாக மருந்துக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு தன் வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வழியில் ஒரு கும்பல் அவரை மறித்து, கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க அவர் ஓடியுள்ளார்.
அவரை விடாமல் விரட்டி சென்று தாக்கியுள்ளனர். அடித்ததுடன் விடாமல், தாஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீப்பற்றியுள்ளனர். தாஸ் தன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக அருகில் உள்ள குளத்தில் குதித்துள்ளார். அருகில் இருந்த மக்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தாஸ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல இடங்களில் வெட்டு காயங்கள், முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சிகிச்சை
முக்கியமாக தாஸின் வயிற்று பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரின் உடல்நலம் மோசமடைந்தது. மேல் சிகிச்சைக்காக அவர் டாக்கா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து வங்கதேச காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாஸ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications