இந்து + கிறிஸ்தவர் + புத்தம்.. மதங்களை கடந்து ஒற்றுமை! வங்கதேச இடைக்கால தலைவருடன் சந்திப்பு - பிரஷர்
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க கோரி கடந்த 10ம் தேதி தலைநகர் டாக்கா உள்பட 2 இடங்களில் 7 லட்சம் இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ஆனாலும் இன்னும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று இந்து, கிறிஸ்தவம் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை சந்திக்க உள்ளனர்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தால் கடந்த 5ம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு கடந்த 8 ம்தேதி வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இந்த இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது

தற்போது ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தாலும் கூட வங்கதேசத்தில் போராட்டம் ஆங்காங்கே நடந்து வருகிறது. குறிப்பாக இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்துக்கள் மட்டுமின்றி அங்கு சிறுபான்மையினராக வசிக்கும் மக்களின் வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த 2 இந்து தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். வங்கதேசத்தில் 52 மாவட்டங்களில் இந்துக்களுக்கு எதிராக மொத்தம் 205 தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்நிலையில் தான் இந்துக்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் எனக்கூறி கடந்த 11ம் தேதி தலைநகர் டாக்கா மற்றும் அந்நாட்டின் 2வது பெரிய நகரான சிட்டகாங்கின் வரலாற்று சிறப்பு மிக்க செராகி பஹார் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 7 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இது இடைக்கால அரசுக்கு பிரஷரை கொடுத்தது. இதையடுத்து இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவது என்பது கொடூரமானது. போராட்டங்களை முன்னெடுக்கும் மாணவர்கள் இந்து, கிறிஸ்தவ மற்றும் பவுத்த குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். அவர்களும் இந்த நாட்டின் மக்கள் தானே? நாட்டை காப்பாற்ற முடிந்த உங்களால் சில குடும்பங்களை காப்பாற்ற முடியாதா என்ன?
சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்த கூடாது என்று நீங்கள் சொல்ல வேண்டும். அவர்கள் நமது சகோதர - சகோதரிகள் தான். நாம் அனைவரும் ஒன்றாக தானே போராடினோம். இனியும் ஒன்றாக இருப்போம். அப்போது தான் தேச ஒற்றுமை வலிமையாக இருக்கும்'' என்றார். ஆனாலும் இன்னும் தாக்குதல் சம்பவம் மட்டும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் தான் இந்து, கிறிஸ்தவம் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இன்று இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசை சந்திக்க உள்ளனர். இதில் சிறுபான்மையினரின் நலன்களை காக்கும் கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் மற்றும் வங்கதேச பூஜா உத்ஜாபான் பரிஷத் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த சந்திப்பின்போது சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வழங்க உள்ளனர். இதுபற்றி இந்து சிறுபான்மையின அமைப்பை சேர்ந்த நிர்வாகியும், வழக்கறிஞருமான கிஷோர் குமார் ராய் கூறியதாவது:
‛‛ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியுடன் அரசியல் ரீதியாக இருப்பதாலேயே பல இந்து குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சரியில்லாத நிலையிலும் சில இந்து குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீடுகளில் நுழைந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் போலீசார் இல்லாததும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணம். இதனை சாதகமாக பயன்படுத்தி பலரும் இந்துக்களை தாக்கி உள்ளனர்'' என்றார். இந்நிலையில் தான் இந்து, கிறிஸ்தவர் மற்றும் புத்த மதத்தை சேர்ந்த நிர்வாகிகள் இன்று இடைக்கால தலைவர் முகமது யூனுசை சந்திக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications