Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கதேசம்: நாளை இரவு 8 மணிக்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்பு: ராணுவ தளபதி தகவல்!

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்க உள்ளது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் செயல்பட உள்ளார். நாளை இரவு 8 மணி அளவில் இடைக்கால அரசு பொறுப்பேற்கும் என வங்கதேச ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் இன்று அறிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

Bangladesh sheikh hasina Muhammad Yunus

ஷேக் ஹசீனா தப்பியோட்டம்: மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்ததை அடுத்து வங்கதேச நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் முகமது ஷகாபுதீன் உத்தரவு பிறப்பித்தார். வங்கதேசத்தில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ராணுவ தளபதி, இடைக்கால அரசு அமைக்கும் முயற்சியை துவங்கினார்.

இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தலைவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் குழுக்களின் பிரிதிநிதிகள் கொண்ட 13 பேருடன் நேற்று அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸை இடைக்கால தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.

வங்கதேச இடைக்கால அரசு: இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அரசில் ராணுவத்தினர் இடம்பெற கூடாது, எந்த கட்சியின் பிரதிநிதியும் இருக்கக் கூடாது, அரசியல் மற்றும் ராணுவத்தை சாராத பொதுமக்கள் பிரதிநிதிகள் மட்டுமே அரசில் பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து 2006ல் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டுள்ளார். நாளை (ஆகஸ்ட் 8) இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் கான் பொறுப்பேற்க உள்ளார்.

நாளை பதவியேற்பு: நோபல் பரிசு பெற்ற டாக்டர் முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை இரவு 8 மணிக்கு பதவியேற்பதாக ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் இன்று தெரிவித்தார். இடைக்கால அரசாங்கம் 15 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும் என்றும், பின்னர் எண்ணிக்கை மாறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராணுவ தளபதி: போக்குவரத்து போலீசார் இல்லாத நேரத்தில் மாணவர்கள் நாடு முழுவதும் தெருக்களை சுத்தம் செய்ததையும், போக்குவரத்தை நிர்வகிப்பதையும் ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் பாராட்டினார். "மாணவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். போக்குவரத்து போலீசார் இல்லாத நிலையில், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணி, சாலைகளை சுத்தம் செய்தல், பல்வேறு நிறுவனங்களை சுத்தம் செய்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியைத் தொடருமாறு நான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த முகமது யூனுஸ்?: முகமது யூனிஸ் (83), தொழிலதிபருமாகவும் பொருளாதார நிபுணராகவும் நாட்டு மக்களிடையே பிரபலமானவர். மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவும் (மைக்ரோ-ஃபைனான்ஸ் முறைக்கு முன்னோடியாக இருந்த கிராமீன் வங்கியை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1984 ஆம் ஆண்டு முகமது யூனுஸ் தொடங்கிய கிராமீன் வங்கி, சாதாரணமாக மற்ற வங்கிகளிடமிருந்து கடன் பெறத் தகுதியில்லாதவர்களுக்கு கடனுதவி அளித்து வந்தது. இதனால் ஏராளமானவர்கள் கொடுமையான வறுமையின் பிடியிலிருந்து வெளியேறினர். இதன் காரணமாக 'பரம ஏழைகளுக்கான வங்கியாளர்' என்று அழைக்கப்படுகிறார்.

ஷேக் ஹசீனா உடன் மோதல்: எனினும், யூனிஸ் கானின் வங்கி நடவடிக்கைகள் தொடர்பாக ஷேக் ஹசீனாஅரசு கடந்த 2008 ல் பல்வேறு விசாரணைகளை நடத்தியது. அவரது வங்கி நடவடிக்கைளை ஆய்வு செய்த அரசு, அரசின் ஓய்வூதிய நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியதாகக் கூறி வங்கியின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து அவரை நீக்கியது.

மேலும், அரசின் அனுமதியில்லாமல் நோபல் பரிசு, அவர் எழுதிய புத்தகங்களுக்கான பதிப்புரிமைத் தொகை என ஏராளமான தொகையைப் பெற்றதாகவும் முகமது யூனுஸுக்கு எதிராக கடந்த 2023-ஆம் ஆண்டு அரசு வழக்கு தொடா்ந்தது. கிராமீன் வங்கி மூலம் ஏழைகளுக்கு கடன் அளித்தாலும், அதை வசூலிக்க மோசமான வழிமுறைகளைக் கையாண்டதாக யூனுஸ் மீது குற்றஞ்சாட்டிய ஷேக் ஹசீனா, 'ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பவர்' என்று விமர்சித்தார்.

நாளை டாக்கா வருகிறார் முகமது யூனுஸ்: மருத்துவ சிகிச்சைக்காக பிரான்ஸ் சென்றுள்ள முகமது யூனுஸ், நாளை, வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு வர உள்ளார். அதன் பிறகு மாலையில், இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்க உள்ளார்.

இதற்கிடையில், தொழிலாளர் சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் யூனுஸின் ஆறு மாத சிறைத்தண்டனையை தொழிலாளர் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இன்று ரத்து செய்தது. இந்த வழக்கில் யூனுஸை நீதிமன்றம் விடுவித்துள்ளது என்று யூனுஸின் வழக்கறிஞர் பாரிஸ்டர் அப்துல்லா அல் மாமூன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+