இந்தியாவுக்கு எதிராக திரளும் உலக நாடுகள்? காய்நகர்த்தும் வங்கதேசம்.. ஷேக் ஹசீனாவால் புதிய பிரச்சனை
டாக்கா: வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அவர் மீது இனப்படுகொலை உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை வங்கதேசம் சுமத்தி உள்ளதோடு பிடிவாரண்ட்டுகளை பிறப்பித்துள்ளது. அதோடு ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரும் வங்கதேசத்தின் கோரிக்கைக்கு நம் நாடு செவிசாய்க்கவில்லை. இதனால் இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளை திரட்டுவோம் என்று வங்கதேசம் மிரட்டல் விடுத்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையானதோடு, அந்த வன்முறை என்பது வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பக்கம் திரும்பியது.

இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஷேக் ஹசீனா ராணுவ ஹெலிகாப்டரில் நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உயிருக்கு பயந்து நம் நாட்டில் வந்திறங்கினார். அவரை மத்திய அரசு ரகசிய இடத்தில் தங்க வைத்து பாதுகாத்து வருகிறது. ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் மிகவும் நட்பாக இருந்ததற்கு கைமாறாக மத்திய அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.
ஆனால் வங்கதேசத்தில் தற்போது அமைந்துள்ள நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஷேக் ஹசீனாவை நாடு கடத்த துடிக்கிறது. ஷேக் ஹசீனா இனப்படுகொலை செய்துவிட்டார் என்று குற்றம்சாட்டி உள்ளது. அதோடு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பிடிவாரண்ட்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேசம் கூறி வருகிறது.
ஆனால் நம் நாடு வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. தொடர்ந்து ஷேக் ஹசீனாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி ஷேக் ஹசீனாவின் விசா காலத்தை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது.
ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதாக வங்கதேசம் சமீபத்தில் அறிவித்த அடுத்த நாளே நம் நாடு விசா நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதன்மூலம் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க முடியாது என்று இந்தியா மறைமுகமாக வங்கதேசத்துக்கு பதிலளித்துள்ளது.
இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு, இந்தியா நாடு கடத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளை திரட்டுவோம் என்று வங்கதேசம் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வங்கதேச இடைக்கால அரசின் சட்டத்துறை ஆலோசகர் ஆசீப் நஸ்ரூல் பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளோம். இந்தியா ஷேக் ஹசீனாவை கண்டிப்பாக இந்தியா நாடு கடத்த வேண்டும். இல்லாவிட்டால் அது இந்தியா - வங்கதேசம் இடையேயான நாடு கடத்தல் தொடர்பான ஒப்பந்தத்தை தெளிவாக மீறும் செயலாக இருக்கும். அதோடு வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் ஷேக் ஹசீனா விஷயத்தில் இந்தியாவின் செயல்பாட்டை சர்வதேச அளவில் எடுத்து செல்லும்.
இதற்கான நடவடிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்து வரும் நிலையில் ரெட் அலர்ட் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எங்களால் முடிந்த அனைத்து விஷயங்களையும் நாங்கள் கையில் எடுப்போம். ஷேக் ஹசீனாவை நாடு கடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளோம். இந்த முயற்சி கைக்கொடுக்காத பட்சத்தில் தேவையென்றால் உலக நாடுகளின் உதவிகளையும் நாங்கள் கேட்போம்’’ என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் ஷேக் ஹசீனா விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை கேட்க வங்கதேசம் முடிவு செய்துள்ளது தெளிவாகி உள்ளது. மேலும் இந்தியா - வங்கதேசம் இடையே நாடு கடத்தல் தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அரசியல் காரணங்களுக்காக சிலரை ஒப்படைக்க மறுக்கலாம். இப்படி மறுக்கும்போது இருநாடுகள் இடையேயான உறவு என்பது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு என்பது ஏற்கனவே மோசமான நிலைமைக்கு சென்றுவிட்டது. வங்கதேசம் கடந்த 1971ம் ஆண்டில் உருவானது. பாகிஸ்தான் ராணுவ வீரர்களை வீழ்த்தி நம் நாட்டு ராணுவம் தான் வங்கதேசத்தை தனி நாடாக உருவாக்கியது. நம் நாட்டு ராணுவம் இல்லாவிட்டால் வங்கதேசம் இன்னும் பாகிஸ்தானின் ஒருபகுதியாக தான் இருந்திருக்கும். ஆனால் அந்த நன்றி விசுவாசத்தை மறந்து தற்போதைய இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.
வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் அவரது தலைமையில் செயல்பட்டு வரும் பல்வேறு துறை ஆலோசகர்கள் தொடர்ந்து நம் நாட்டுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். நம் நாட்டு எல்லையில் தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு, நம் நாட்டுக்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பாகிஸ்தான், துருக்கியுடன் நட்பு பாராட்டி வருகிறது.
இதனால் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இருநாடுகள் இடையேயான உறவு என்பது மோசமாகி உள்ளது. அதோடு வங்கதேசத்தின் முதல் பிரதமரும், வங்கதேசத்தின் தந்தை என அழைக்கும் ஷேக் முஜ்பூர் ரஹ்மான் (ஷேக் ஹசீனாவின் தந்தை) நம் நாட்டுடன் இணக்கமாக செயல்பட்டார். தந்தை வழியில் மகள் ஷேக் ஹசீனாவும் நம்முடன் நட்பு பாராட்டி வந்தார். இதனால் தான் ஷேக் ஹசீனாவின் உயிருக்கு வங்கதேசத்தில் ஆபத்து ஏற்பட்டபோது நம் நாடு அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications