உலக வரலாற்றில் இதுவரை நடக்காத.. மிகப்பெரிய சம்பவம்.. சீனா சத்தமின்றி நிகழ்த்திய மேஜிக்.. போச்சு
சீனா: "இங்கு சென்றால் திரும்புவது கடினம்" - இதுதான் சீனாவின் தக்லமாக்கான் (Taklamakan) பாலைவனத்திற்கு உலகத்தினர் சூட்டிய பெயர். 'சாவுக்கடல்' என்று வர்ணிக்கப்பட்ட இந்தப் பெரும் மணற்பரப்பு, இப்போது உலகின் மிகப்பெரிய கார்ப்பன் ஈர்ப்பு கூடமாக (Carbon Sink) மாறி உள்ளது. உலக வரலாற்றில் ஒரு பாலைவனத்தை வைத்து எந்த நாடும் செய்யாத சாதனையை சீனா செய்துள்ளது. ஒரு பாலைவனத்தை கிட்டத்தட்ட சோலைவனமாக சீனா மாற்றிக்காட்டி சாதித்துள்ளது.

சீனப் பெருஞ்சுவர் தெரியும்... அது என்ன 'பசுமைப் பெருஞ்சுவர்'?
1978-ல் சீனா ஒரு மெகா பிளானைப் போட்டது. அது தக்லமாக்கான் பாலைவனத்தை பசும் சோலையாக்குவது. அதன் பெயர் 'Three-North Shelterbelt Program'. அதாவது, வடக்கு சீனாவில் வேகமாகப் பரவி வந்த பாலைவனமாக்கலைத் தடுக்க, ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு மரங்களை நட்டு ஒரு 'பசுமைப் பெருஞ்சுவரை' உருவாக்குவதுதான் அந்தத் திட்டம்.
சுமார் 45 ஆண்டுகால உழைப்புக்குப் பிறகு, 2024-ன் இறுதியில் தக்லமாக்கான் பாலைவனத்தைச் சுற்றி 3,046 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு பிரம்மாண்ட பசுமை வளையத்தை சீனா கட்டி முடித்தது. இன்று அந்தப் பாலைவனத்தின் விளிம்புகள் வெறும் மணல் மேடுகளாக இல்லாமல், கரியமில வாயுவை (CO2) உறிஞ்சும் நுரையீரல்களாக மாறியுள்ளன.
அறிவியல் சொல்லும் ஆச்சரியம்!
சமீபத்தில் 'PNAS' இதழில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில், நாசாவின் (NASA) செயற்கைக்கோள் தரவுகளைக் கொண்டு ஒரு விஷயம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாகப் பாலைவனங்கள் கார்பனை உறிஞ்சாது. ஆனால், தக்லமாக்கான் பகுதியில் நடப்பட்டிருக்கும் 6,600 கோடி மரங்கள், வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் அளவை சுமார் 3 ppm (parts per million) வரை குறைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செடிகள் ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடும் ஒரு மெல்லிய அகச்சிவப்பு ஒளியை (Solar-Induced Fluorescence) வைத்து, அந்தப் பாலைவனத்தில் தாவரங்கள் சுறுசுறுப்பாக கார்பனை உறிஞ்சும் வேலை செய்வதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
எப்படிச் சாத்தியமானது இந்த 'மேஜிக்'?
தண்ணீரே இல்லாத இடத்தில் இவ்வளவு மரங்கள் எப்படிச் செழித்தன? அதற்குப் பின்னால் இருக்கும் சீனத் தொழில்நுட்பங்கள் இதோ:
சொட்டு நீர் பாசனம்: ஒவ்வொரு செடிக்கும் தேவையான தண்ணீர் மிகத் துல்லியமாக வேர்களுக்கு மட்டுமே செல்லும் வகையில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சாதாரணச் சொட்டு நீர் பாசனம் போல் அல்லாமல், இங்கு ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் நிலத்தடி சென்சார்கள் (Soil Moisture Sensors) புதைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சென்சார்கள் மண்ணின் ஈரப்பதம் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்குக் கீழே குறைந்தால் மட்டுமே தண்ணீரைத் திறக்கும்.
இதன் மூலம் ஆவியாதல் (Evaporation) தவிர்க்கப்பட்டு, 90% வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது. அதேபோல் பாலைவன நிலத்தடி நீர் பெரும்பாலும் உப்பாக இருக்கும். சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஒரு வகை உப்புநீக்க வடிகட்டிகள் (Desalination Filters) மூலம், அந்த உவர் நீரையே செடிகளுக்கு உகந்த நீராக மாற்றிப் பயன்படுத்துகின்றனர்.
சோலார் கண்காணிப்பு: சூரிய ஒளியில் இயங்கும் தானியங்கி நிலையங்கள் மூலம் மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் வேகம் நொடிக்கு நொடி கண்காணிக்கப்படுகிறது.
பாலைவன ஹீரோ: சாதாரண மரங்களை நடாமல், உவர் மண்ணிலும் கடும் வறட்சியிலும் வளரக்கூடிய 'டெசர்ட் பாப்லர்' (Desert Poplar) மற்றும் 'சாக்ஸால்' (Saxaul) போன்ற தாவரங்களைத் தேர்ந்தெடுத்து நட்டுள்ளனர்.
சவால்கள் என்ன?
இந்தச் சாதனை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ஒரு அச்சமும் இருக்கிறது. இந்தத் திட்டத்திற்குத் தேவையான தண்ணீர், அருகில் உள்ள குன்லுன் மற்றும் தியான் ஷான் மலைகளில் இருக்கும் பனிப்பாறைகள் உருகுவதன் மூலமே கிடைக்கிறது. புவி வெப்பமயமாதலால் இந்தப் பனிப்பாறைகள் முழுமையாகக் கரைந்துவிட்டால், இந்தப் பசுமைப் போர்வை காய்ந்துவிடும் அபாயமும் உள்ளது.
இருப்பினும், "மனிதன் நினைத்தால் இயற்கையை மீட்டெடுக்க முடியும்" என்பதற்கு தக்லமாக்கான் ஒரு ஆகச்சிறந்த உதாரணம். நேற்றைய 'சாவுக்கடல்', இன்றைய 'சுவாசப்பை' ஆகியிருக்கிறது!












Click it and Unblock the Notifications