"அடிமை சங்கிலியை உடைத்து எறிந்த ஆப்கான்".. தாலிபான் வெற்றியை கொண்டாடும் பாக். பிரதமர் இம்ரான் கான்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அடிமை சங்கிலியை உடைத்து எறிந்து உள்ளனர், அடிமை உணர்வுகளில் இருந்து தாலிபான்கள் வெளியே வந்துள்ளனர் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராட்டி உள்ளார். தாலிபான் படைகளுக்கு பாகிஸ்தான் இத்தனை நாட்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வந்த நிலையில் தற்போது தாலிபான்களின் வெற்றியை இம்ரான் கான் வெளிப்படையாக பாராட்டி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 வருடமாக நடந்த போரில் தாலிபான்கள் வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளது. தாலிபான்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் செப்டம்பர் 11ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் படைகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும்.
ஆனால் அமெரிக்க அதிபர் பிடன் இந்த மாத இறுதிக்குள்ளாகவே அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் என்று அறிவித்துவிட்டார். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருவதால் ஒவ்வொரு பகுதிகளாக தாலிபான்கள் கைப்பற்றி வந்தது. நேற்று காலையில் ஜலாலாபாத் பகுதியை கைப்பற்றிய தாலிபான் பிற்பகலில் காபூலை கைப்பற்றியது.

ஆட்சி மாற்றம்
எந்த மோதலும் இன்றி காபூலை தாலிபான்கள் பிடித்தது. இதையடுத்து நேற்று ஆட்சி மாற்றம் குறித்து தாலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவி விலகுவதாக அறிவித்தார். அதோடு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அஷ்ரப் கானி தஜிகிஸ்தானில் பாதுகாப்பாக குடியேறினார். இதனால் ஆப்கானிஸ்தானில் குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் என்று அனைத்தையும் தாலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்தது. அதோடு போரில் தாலிபான்கள் வெற்றிபெற்றதாகவும், ஆட்சியை நாங்கள் கைப்பற்றிவிட்டோம் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளன.

பாகிஸ்தான்
இந்த போரில் தொடக்கத்தில் இருந்தே தாலிபான்களுக்கு பாகிஸ்தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வந்தது. அமெரிக்கா பாகிஸ்தானின் தாலிபான் ஆதரவு கொள்கைகளை சில சமயங்களில் கண்டித்த போதிலும் கூட பாகிஸ்தான் தொடர்ந்து தாலிபான்களுக்கு ஆதரவு அளித்து வந்தது. இந்த தாலிபான் அமைப்பை தொடங்கிய தொடக்க கால உறுப்பினர்களில் சிலரும் கூட பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாலிபான்களுக்கு பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக உதவி வந்தது.

பயிற்சி
அதோடு ராணுவ ரீதியாகவும் பாகிஸ்தான் தாலிபான்களுக்கு பயிற்சிகளை வழங்கி வந்தது. கடந்த இரண்டு வாரமாக நடந்த மோதலில் கூட தாலிபான்களின் வெற்றியில் பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் பங்கு இருந்தது. பாகிஸ்தான் அனுப்பிய படைகளும், அவர்கள் வகுத்து கொடுத்த திட்டங்களும் தாலிபான்களுக்கு உதவியாக ஆப்கான் முன்னாள் அரசு குற்றஞ்சாட்டியது, அதோடு தாலிபான்களுக்கு பாகிஸ்தானின் விமான படை உதவி செய்வதாகவும் ஆப்கானிஸ்தானின் அஷ்ரப் கானி தெரிவித்து இருந்தார். அந்த அளவிற்கு தாலிபான்கள் பாகிஸ்தான் இடையே உறவு இருந்தது.

பாகிஸ்தான் பிரதமர்
ரஷ்ய, சீனா ஆதரவும் கூட பாகிஸ்தானுக்கு ஒரு விதத்தில் பாதுகாப்பை கொடுத்தது. தாலிபான்களின் வெற்றி ஒரு விதத்தில் பாகிஸ்தானுக்கும் வெற்றிதான். இந்த நிலையில் தாலிபான்கள் வெற்றி குறித்து தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அளித்துள்ள பேட்டியில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அடிமை சங்கிலியை உடைத்து எறிந்து உள்ளனர். இத்தனை நாட்கள் அவர்களை கட்டிப்போட்டு இருந்த சங்கிலியை உடைத்து எறிந்து அவர்கள் வெளியே வந்துள்ளனர். வெளிநாட்டு படைகள் இங்கே இருந்ததால் அவர்களின் கலாச்சாரம் ஆப்கானிஸ்தானில் ஊடுருவி விட்டது. ஆப்கானிஸ்தான் இத்தனை நாட்கள் கலாச்சார ரீதியான அடிமைத்தனத்தை பின்பற்றி வந்தது.

மக்கள் விடுவிப்பு
தற்போது அதில் இருந்து மக்களை தாலிபான்கள் விடுத்துள்ளனர். ஆங்கில மீடியத்தில் படிப்பது உட்பட மற்றவர்களின் கலாச்சாரத்தை நீங்கள் பின்பற்றும் போது, அந்த கலாச்சாரத்தை நீங்கள் உங்களுக்கும் மேலாக நினைத்துக்கொள்வீர்கள். இதனால் அந்த கலாச்சாரத்திற்கு நீங்கள் அடிமையாகிவிடுவீர்கள். இதில் இருந்து எளிதாக வெளியேற முடியாது. ஆனால் ஆப்கானிஸ்தான் மக்கள் இதில் இருந்து வெளியேறி, தங்கள் கலாச்சாரத்தை திரும்ப பெற்றுள்ளனர், என்று இம்ரான் கான் வெளிப்படையாக தாலிபான் அரசை பாராட்டி உள்ளார்.

களேபரம்
இத்தனை நாட்கள் இவ்வளவு வெளிப்படையாக இம்ரான் பேசாத நிலையில் தற்போது வெளிப்படையாக தாலிபான்களை பாராட்டி உள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்தே மொத்த ஆப்கானிஸ்தானும் களேபரமாக மாறியுள்ளது. காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளிநாடுகளுக்கு வெளியேற தொடங்கி உள்ளனர். தாலிபான்கள் 2001க்கு முன் ஆப்கானிஸ்தானில் கொடுமையாக 6 வருட ஆட்சியை நடத்தினார்கள்.

சட்டம்
மிக மோசமான பிற்போக்கு சட்டம், கொடுமையான தண்டனைகளுக்கு, பெண்களுக்கு எதிரான கடுமையான விதிகள் என்று தாலிபான்கள் மிக மிக கொடுமையான ஆட்சியை ஆப்கானிஸ்தானில் நடத்தினார்கள். அந்த இருண்ட காலத்திற்கு மீண்டும் செல்ல கூடாது என்பதால் தலிபான்களிடம் இருந்து தப்பிக்கும் வகையில் மக்கள் சாரைசாரையாக வெளியேறி வருகிறார்கள். விசா, பாஸ்போர்ட் இல்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள்.

காபூல்
இதனால் காபூல் விமான நிலையத்தில் பல லட்சம் பேர் தற்போது குழுமி உள்ளனர். அங்கிருந்து கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஜெர்மனிக்கு தப்பித்து செல்லும் முடிவில் ஆப்கானிஸ்தான் மக்கள் உள்ளனர். இங்கு எப்படியாவது அகதி உரிமை பெற்று வாழ்ந்து விடலாம் என்ற கடைசி நம்பிக்கையில் இவர்கள் வெளியேறி வருகிறார்கள். இதனால் மொத்த ஆப்கானிஸ்தானும் தற்போது களேபரமாக காணப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications