லாரன்ஸ் பிஷ்னோய் கேங் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு.. கனடா எடுத்த அதிரடி முடிவு!
ஒட்டாவா: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடா அரசு "பயங்கரவாத அமைப்பாக" பட்டியலிட்டுள்ளது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலுடன் தொடர்புடையது லாரன்ஸ் பிஷ்னோய் கேங்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர் பாபா சித்திக் படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மும்பையில் உள்ள பாந்த்ரா கிழக்கு பகுதியில் அவரைச் சுட்டு வீழ்த்திய நபர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியானது. இதனால் குஜராத் சிறையில் இருக்கும் அந்தக் கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் மீது அனைவரின் கவனமும் திரும்பியது.

லாரன்ஸ் பிஷ்னோய்
கடந்த காலங்களில் மும்பை நிழல் உலக தாதாவாக தாவூத் இப்ராகிம் செயல்பட்டு வந்தார். அவர் பாணியை லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்வதாக கூறப்படுகிறது. லாரன்ஸ் கும்பலில் தற்போது சர்வதேச அளவில் கூலிப்படையாக செயல்படும் சுமார் 700 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்கள் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியும் பெற்றுள்ளனர். இவர்கள், பாகிஸ்தான், கனடா உள்ளிட்ட 11 நாடுகளில் செயல்படுவதாக கூறப்படுகிறது.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய இந்திய மாநிலங்கள் மட்டுமன்றி கனடா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் செயல்படுகிறது பிஷ்னோய் கேங். பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து மிரட்டி பணம் பறித்தல், கொலை செய்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. உயர் அந்தஸ்தில் இருப்பவர்களை கொலை செய்வதில் பெயர் பெற்றுள்ளது இந்த கும்பல்.
பிஷ்னோய் கேங்
பஞ்சாப் மாநிலம், அபோஹருக்கு அருகில் உள்ள தட்டரன்வாலி கிராமத்தில் பிறந்தவர் லாரன்ஸ் பிஷ்னோய். இவரது தந்தை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது கோல்டி பிராரைச் சந்தித்தார் லாரன்ஸ். இந்தச் சந்திப்புதான் அவர் நிழல் உலகில் அடியெடுத்து வைக்க காரணமாக அமைந்தது. கோல்டியும் லாரன்ஸ் பிஷ்னோயும் பின்னாட்களில் நெருங்கிய கூட்டாளி ஆகியுள்ளனர். லாரன்ஸ் சிறையில் இருந்தாலும் கும்பலின் அட்டூழியங்கள், குற்றச்செயல்கள் எவ்வித தங்குதடையும் இன்றி அரங்கேறி வருகின்றன.
லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தே குற்றங்களைத் திட்டமிட்டு, செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. சிறைக்குள்ளிருந்து அவர் தினமும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள கூட்டாளிகளுடன் தொடர்புகொள்கிறார் எனக் கூறப்படுகிறது. தனிச் சிறையில் அடைக்கப்பட்டாலும், பல சிறைகளுக்கு மாற்றப்பட்டாலும் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து உள்ளுக்குள் இருந்து தனது கும்பலைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
கனடாவில் பிஷ்னோய் கேங்
கனடாவின் சுர்ரே என்ற இடத்தில் காமெடி நடிகர் கபில் சர்மாவிற்கு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. இந்த ரெஸ்டாரண்ட் மீது ஏற்கெனவே ஜூலை மாதம் 10 ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டம் பொறுப்பு ஏற்றது.
கடந்த ஜூன் 2023 இல் காலிஸ்தானி ஆதரவு நபரான ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்டது, பிஷ்னோய் கும்பலின் சர்வதேச 'சான்றுகளை' உறுதிப்படுத்தியது. நிஜ்ஜர் ஒரு கனடா நாட்டைச் சேர்ந்த குடிமகன் என்பதால் அவரது கொலை இந்தியா - கனடா இடையேயான உறவுக்கு சிக்கலாக அமைந்தது. நிஜ்ஜார் கொலையில் இந்திய அதிகாரிகளும் உடந்தை என ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, காலிஸ்தானி பயங்கரவாத வாக்கு வங்கிகளுக்கு ட்ரூடோ துணை போவதாக குற்றம் சாட்டியது. இதன் விளைவாக இந்தியா- கனடா உறவுகள் சீர்குலைந்தன. எனினும், பிரதமர் பதவியில் இருந்து ட்ரூடோ நீக்கப்பட்டு,மார்க் கார்னி நியமிக்கப்பட்டதிலிருந்து, இந்தியா - கனடா உறவுகள் மெதுவாக மீண்டு வருகின்றன.
பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு
இந்நிலையில், இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் கொலை, மிரட்டி பணம் பறித்தல், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கும்பலை கனடா அரசாங்கம் பயங்கரவாத அமைப்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி இன்று அறிவித்துள்ளார்.
கனடா நாட்டில் உள்ள எந்தவொரு பிஷ்னோய் கும்பல் சொத்தும், பணம் முதல் வாகனங்கள் வரை, முடக்கப்படலாம் அல்லது பறிமுதல் செய்யப்படலாம். இது கனடா அரசின் சட்ட அமலாக்கத்திற்கு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக பிஷ்னோய் கேங் உறுப்பினர்களைத் தண்டிக்கும் அதிகாரத்தைக் கொடுக்கும். பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என கனேடிய அரசு அதிகாரிகள் சந்தேகித்தால் அவர்கள் கனடாவிற்குள் நுழைவதைத் தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications