இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த கனடா.. குடியுரிமை விதிகளில் மேஜர் மாற்றம்! பெரிய நிம்மதி
ஒட்டாவா: உலகின் பல்வேறு நாடுகளும் குடியுரிமை சார்ந்த விதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில் கனடா குடியுரிமை ரூல்ஸில் மிக முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் இந்திய வம்சாவளியினர் பயன் பெறுவார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்த காலகட்டத்தில் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக உலகெங்கும் புலம்பெயர்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை கொடுப்பதில் விதிகளைக் கடுமையாக்கி வருகிறது. இதற்கிடையே எதிர்பாராத நேரத்தில் கனடா இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

குடியுரிமை சட்டத்தில் மாற்றம்
அதாவது கனடாவின் குடியுரிமைச் சட்டங்களில் பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வெளிநாட்டில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கனடா நாட்டின் குடியுரிமையை இது கொடுக்கும். குடியுரிமைச் சட்டத்தை (2025) திருத்துவதற்கான மசோதா சி-3 கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சர் சொல்வது என்ன
இது தொடர்பாகக் கனடாவின் குடிவரவு அமைச்சர் லீனா மெட்லெஜ் டியாப், "இந்த மசோதா நாட்டின் குடியுரிமைச் சட்டங்களில் நீண்டகாலமாக நிலவி வந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும். வெளிநாட்டில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு நீதியைத் தரும். இது முந்தைய சட்டங்களால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குக் குடியுரிமை வழங்கும்.. நவீன குடும்பங்களைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்திற்கான தெளிவான விதிகளை அமைக்கும். இந்த மாற்றங்கள் கனடா நாட்டுக் குடியுரிமையை வலுப்படுத்தும்" என்றார்.
பழைய விதிகள்
கடந்த 2009ல் கொண்டு வரப்பட்ட கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை விதிகளின்படி சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. இதை ஆங்கிலத்தில் first-generation limit என்றார்கள். பெற்றோரில் ஒருவர் கனடாவில் பிறந்தவராக இருந்தால் மட்டுமே குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது.
ஒரு கனடா குடியுரிமை பெற்ற தம்பதி சில காரணங்களால் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது அவர்களுக்குக் குழந்தை பிறந்தால்.. அது கனடாவுக்கு வெளியே பிறந்திருந்தாலும் கூட கனடா குடியுரிமை கிடைக்கும். அதாவது முதல் தலைமுறைக்குத் தானாகக் குடியுரிமை கிடைக்கும்.
இருப்பினும், அடுத்த தலைமுறை என வரும்போது பெற்றோரில் யாராவது ஒருவர் கனடாவில் பிறந்திருக்க வேண்டும். பெற்றோர் இருவரும் கனடா குடியுரிமை பெற்றிருந்தாலும் கூட வெளிநாட்டில் பிறந்து இருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை தானாக வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விதியின் காரணமாகப் பல லட்சம் பேர் குடியுரிமை பெற முடியாமல் போனது.
கனடா நீதிமன்றம்
கடந்த 2023ம் ஆண்டில் இந்த விதி அரசியலமைப்பிற்கு எதிரானது கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்ட கனடா அரசு, மேல்முறையீடு செய்யவில்லை. இந்தச் சூழலில் தான் முந்தைய விதியால் குடியுரிமை பெற முடியாதவர்கள் மற்றும் எதிர்காலத்தில் இந்த சிக்கல் வராமல் இருக்கக் குடியுரிமை சட்டத்தைக் கனடா நிறைவேற்றியுள்ளது.
இந்த புதிய விதியின் கீழ், வெளிநாட்டில் பிறந்த கனடா பெற்றோர் தங்கள் குழந்தை பிறப்பதற்கு அல்லது தத்தெடுப்பதற்கு முன் குறைந்தபட்சம் 1,095 நாட்கள் கனடாவில் வாழ்ந்திருந்தாலே போதும்.. அக்குழந்தைக்குத் தானாகக் கனடா குடியுரிமை கிடைக்கும். மற்ற வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் குடியுரிமை நடைமுறைகளுடன் இது ஒத்துப்போகிறது. வரும் ஜனவரி முதல் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு நல்லது
கனடா நாட்டு குடியுரிமை பெற்றுவிட்டு வெளிநாடுகளில் வசித்து பலரும் பல லட்சம் பேருக்கு இந்த சட்டம் நிச்சயம் உதவும். குறிப்பாக இந்தியர்கள் பலரும் குடியுரிமை வாங்கிவிட்டு சில காரணங்களால் இந்தியாவில் வசித்து வந்த நிலையில், அவர்களும் இதன் மூலம் பலன் அடைவார்கள். பல ஆயிரம் பேர் இதனால் பலனடைவார்கள் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications