டொரன்டோ தமிழ் இருக்கைக்கான குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம்...கனடியத் தமிழர் பேரவை அறிவிப்பு
டொரன்டோ : டொரன்டோ தமிழ் இருக்கைச் செயல் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான 3,000,000 டாலர் என்ற குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம் என கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக கடந்த சில மாதங்களாக இணையம் வழியாக நிதி திரட்டப்பட்டு வந்தது.
2018 ம் ஆண்டு மே மாதம், கனடாவில் முதலாவது தமிழ் இருக்கையை நிறுவுவதற்காக, கனடியத் தமிழர் பேரவையும், தமிழ் இருக்கை அமைப்பும் இணைந்து, டொரன்டோ பல்கலைக்கழகத்தோடு ஓர் உடன்படிக்கையை மேற்கொண்டது. கோவிட்-19 என்ற உலகளாவிய பெருந்தொற்றால் துவண்டுவிடாது, தமிழ் சமூகமும், ஆர்வலர்களும் இணைந்து கனடிய மண்ணிலே வரலாற்று அருஞ்செயலை ஆற்றியுள்ளார்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும், தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டுவதற்காக இணையம் வழியாக பல்வேறு கர்நாடக இசை கச்சேரிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன. கொடையாளர்கள் இணையம் வழியாகவே நிதி அளிக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது.
கனடியத் தமிழர் பேரவை, அனைத்து கொடையாளருக்கும், சமூக அமைப்புகளுக்கும், ஊர்ச்சங்கங்களுக்கும், பழைய மாணவர் சங்கங்களுக்கும், கலைஞர்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும், அனைத்து நாடுகளிலிருந்தும் ஆதரவு வழங்கிய நல்உள்ளங்களுக்கும் உள்ளார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. குறிப்பாக, இச்செயல் திட்டத்தை நிறைவேற்ற உதவிய தமிழக அரசின் ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றது.
இந்த வரலாற்றுச் செயல் திட்டமானது ஈழத்தமிழரின் தலைவராக விளங்கிய தந்தை செல்வா என்று அழைக்கப்படும் சா. ஜே. வே செல்வநாயகத்தின் 44ஆவது நினைவுநாளில் எட்டப்பட்டுள்ளது என்பதும், செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை வழங்கிய நிதிக்கொடையால் எட்டியுள்ளோம் என்பதும் கூடுதல் சிறப்பு என கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications