உடனே சிரியாவிலிருந்து வெளியேறுங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு!
டமாஸ்கஸ்: லெபனானில் இஸ்ரேல் போரை நிறுத்துவதாக அறிவித்ததையடுத்து, அமெரிக்கா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் சிரியாவில் அரசுக்கு எதிரான கலகத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் பக்கத்தில் இருக்கும் நாடுதான் சிரியா. இந்நாட்டில் அதிபர் அல்-அஸாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு முதல் இங்கு உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய அதிபர் ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவு பெற்றவர். எனவே இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, புதிய ஆட்சியை தங்கள் ஆதரவுடன் அமைக்க வேண்டும் அமெரிக்காவும், இஸ்ரேலும் முயன்று வருகின்றன.

இதற்காக ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) எனும் அமைப்பை இந்நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த அமைப்பு தொடக்கத்தில் அல்-கொய்தாக்கு ஆதரவு தெரிவிக்க உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த 2016ல் அல்-கொய்தாவுடனான உறவை துண்டித்துக்கொள்வதாக அறிவித்தது. அதன் பின்னர் சிரியாவில் உள்ள ரஷ்ய ஆதரவு அரசை அகற்றுவதை நோக்கம் என்று அறிவித்து, அமெரிக்காவுடன் டீலிங் பேசி ஆயுத உதவியுடன் கிளர்ச்சியை தொடங்கியுள்ளது.
இருப்பினும் சிரியாவின் முக்கிய நகரங்களான டமாஸ்கஸ் உள்ளிட்டவை சிரிய அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆனால் கடந்த 10 நாட்களில் இந்த நிலைமை மாற தொடங்கியுள்ளது. மூன்றாவது பெரிய நகரமான ஹமாஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இவர்களின் திடீர் தாக்குதலை எதிர்பாராத ராணுவம் பின்வாங்க தொடங்கியுள்ளது. இப்படியே போனால் விரைவில் முழு நாட்டையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிவிடுவார்கள் என சொல்லப்படுகிறது.
ஆனால், ஈரான் இதை பார்த்துக்கொண்டு நிச்சயம் சும்மா இருக்காது. ஏதாவது கடுமையான பதிலடியை கொடுக்கும். எனவே இனி வரும் நாட்களில் சிரியாவில் ரத்த ஆறு ஓட வாய்ப்பு இருக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து கிளர்ச்சியாளர்கள் கவலைக்கொள்ளவில்லை. அவர்கள் இதை 'இணை சேதம்' (Collateral Damage) என்று குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் சிரியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக கிடைக்கும் விமானங்களை பிடித்து நாடு வந்து சேருமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மீட்பு குறித்த உதவிக்கு +963993385973 என்கிற எண்ணை தொடர்புகொள்ள வேண்டும் என்றும், [email protected] எனும் மெயில் முகவரியை பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 2.8 லட்சம் சிரிய மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் 25 லட்சமாக உயரும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications