நிர்மலா சீதாராமன் இங்கிட்டு வந்த உடனே யாழ்ப்பாணத்துக்குள் நுழைந்த சீனா..’ உளவு பார்க்க’ முகாம் ரெடி!
யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பிய உடனே சீனா அங்கு சேட்டையை ஆரம்பித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான திருகோணமலை, யாழ்ப்பாணம் சென்றார். திருகோணமலையில் வங்கி கிளையை திறந்து வைத்தார். திருக்கோணேஸ்வரம் கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலிலும் நிர்மலா சீதாராமன் தரிசனம் செய்தார். யாழ்ப்பாணத்தில் மத்திய அரசு கட்டி கொடுத்த கலாசார மையத்தையும் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

கொழும்பில் நிர்மலா சீதாராமன்: இதனைத் தொடர்ந்து கொழும்பில் நடைபெற்ற மலையகம் 200 நிகழ்வுகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில்தான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை ஒளிபரப்பு செய்யவில்லை என்கிற சர்ச்சையும் வெடித்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி உள்ளார்.

சீனா தூதர் குழு: இந்நிலையில் இலங்கைக்கான சீனா தூதர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழு திடீரென யாழ்ப்பாணத்துக்கு சென்றது. யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவில் தமிழர்களுக்கு உலர் உணவு மூட்டைகளை சீனா தூதர் குழு வழங்கியது. அத்துடன் யாழ்ப்பாணம் மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கும் வீடுகள் கட்டவும் நிதி உதவியையும் சீனா தூதர் குழு வழங்கியது.

யாழ்ப்பாணத்தில் சீனா: பின்னர் யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தையும் சீனா தூதர் குழு பார்வையிட்டது. இந்த பழைய கச்சேரி கட்டிடத்தை சீனாவுக்கு விற்பனை செய்ய இலங்கை ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாக சர்ச்சை வெடித்தது. பின்னர் இந்த விவகாரம் அடங்கிப் போனது. தற்போது திடீரென அதே பழைய கச்சேரி கட்டிடத்தை சீனா தூதர் தலைமையிலான குழு பார்வையிட்டிருக்கிறது. இதனால் இந்த பழைய கச்சேரி கட்டிடத்தை சீனா விலைக்கு வாங்குவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவை உளவு பார்க்க உதவி: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள யாழ்ப்பாணத்தில் ஒரு கட்டிடத்தை சீனா விலைக்கு வாங்கி முகாமிடுவது என்பது இந்தியாவை உளவு பார்க்கக் கூடிய ஒரு நடவடிக்கைதான் என்பது அரசியல் பார்வையாளர்களின் விமர்சனம். இந்தியாவிடம் இருந்து பெருமளவு நிதி உதவி பெற்றுக் கொள்ளும் இலங்கை அரசாங்கம், இந்தியாவின் தென்முனையில் சீனாவுக்கு வாசலை திறந்துவிட துணிந்திருப்பது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்பதும் அரசியல் விமர்சகர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications