அமெரிக்காவின் B-2 விமானத்தை புகழ்ந்த சீனா.. இந்தியா உஷாராக வேண்டிய நேரம் இது!
பெய்ஜிங்: அமெரிக்காவின் B-2 ரக விமானத்தை சீனா புகழ்ந்திருக்கிறது. தனது நட்பு நாடான ஈரான் மீது குண்டுகளை வீசிய விமானத்தை சீனா எதற்காக புகழ வேண்டும்? பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்று பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என்று சொல்லி அதன் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. ஆனால் அணு ஆய்வு மையங்களை இஸ்ரேலால் முழுமையாக தகர்க்க முடியவில்லை. இதனையடுத்து, அமெரிக்காவின் உதவியை இஸ்ரேல் நாடியது. அமெரிக்கா, B-2 ரக விமானத்தை பயன்படுத்தி GBU-57 ரக குண்டை ஈரான் மீது வீசியது.

இந்த தாக்குதலும் முழுமையாக வெற்றியடையவில்லை என்பது தனிக்கதை. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஊடுருவல்தான்.
சீனாவின் கவனம்
'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்று அழைக்கப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை ஜூன்-22ம் தேதி நடந்தது. ஏழு B-2 ரக விமானங்கள் மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டு, 36 மணி நேரம் பயணித்து ஈரானின் அணு ஆய்வு மையங்களை தாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையில், B-2 விமானங்கள் எங்கும் இடைமறிக்கப்படவில்லை. 7 விமானங்களும் பத்திரமாக அமெரிக்காவுக்கு திரும்பியுள்ளன. இது சீனாவின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
6ம் தலைமுறை vs B-2
சீனா நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ஆறாம் தலைமுறை போர் விமான தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், B-2 போன்ற 'போர் வியூக விமானங்களுக்கு' இது இணையாகாது என்று அந்நாடு கருதுகிறது. இந்த விமானங்களால், மறைந்து சென்று உலகின் எந்தப் பகுதியிலும் தாக்குதல் நடத்த முடியும். சீனாவின் ராணுவ ஆய்வாளர் சாங் ஜாங்பிங் இது குறித்து கூறுகையில்,
சீனாவின் முயற்சி
"நீண்ட தூரம் சென்று தாக்கும் பிற ஆயுதங்கள் இருந்தாலும், ஒரு போர் வியூக விமானத்திற்கு அது ஈடாகாது. அணு ஆயுதங்களையும் ஏந்தி சென்று இதனால் தாக்க முடியும். தற்போது சீனாவின் J-36 மற்றும் J-50 எனப்படும் ஆறாம் தலைமுறை போர் விமானங்களின் சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், B-2 ரக விமானம் 10,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என்பதால், சீனாவின் 6ம் தலைமுறை விமானங்கள் இதைவிட மேம்பட்டதாக இருக்க வேண்டும்.
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் தான் போர் வியூக ஆயுதத்தின் சாராம்சம். அமெரிக்காவின் B-2, B-1B மற்றும் B-52 போன்ற விமானங்கள் இந்த திறனை கொண்டுள்ளன. ஆனால் சீனாவிடம் தற்போது இந்த திறன் இல்லை.
புதிய விமானங்கள்
சீனாவின் H-6K, H-6N மற்றும் H-6J போன்ற நீண்ட தூர போர் விமானங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இதில், H-6K விமானம் எதிரிகளை நீண்ட தூரத்தில் இருந்து தாக்கும் திறன் கொண்டது. H-6N விமானம் வான்வழியில் எரிபொருள் நிரப்பும் வசதியை கொண்டிருக்கிறது. H-6J விமானம் கடல் இலக்குகளைத் துல்லியமாக தாக்கும். இருப்பினும், சீன விமானங்கள் அமெரிக்க மற்றும் ரஷ்ய விமானங்களை விட குறைந்த தூரமே செல்லும்.
சீனா தற்போது H-20 என்ற புதிய போர் விமானத்தை உருவாக்கி வருகிறது. இது அமெரிக்க மற்றும் ரஷ்ய போர் விமானங்களுக்கு இணையானதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு நெருக்கடி
சீனா இப்படி கூறியிருப்பது இந்தியாவுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இன்னும் 5ம் தலைமுறை விமானங்களையே வாங்கவில்லை. இப்படி இருக்கும்போது சீனா B-2 போன்ற விமானங்களை புகழ்ந்து பேசியிருப்பது, அதைபோன்றே அல்லது அதைவிட மேம்பட்ட விமானங்களை உருவாக்குவதற்காக முதல் படியாக பார்க்கப்படுகிறது. அப்படி ஏதாவது நடந்தால், இந்தியாவும் இதேபோன்ற விமானங்களை உருவாக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications