உச்சமடையும் உக்ரைன் போர்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ரஷ்ய அதிபர் புதின் திடீர் ஆலோசனை..பரபர தகவல்
மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் போர் நடைபெற்று வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ரஷ்ய அதிபர் புதின் உடன் ஆலோசனை நடத்தி உள்ளார்
உக்ரைன் நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பதற்றமான ஒரு சூழல் நிலவி வந்தது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா அதிகப்படியான வீரர்களைக் குவித்து வந்தது.
இந்தச் சூழலில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க உள்ளதாக மேற்குலக நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. இருப்பினும் முதலில் போர் தொடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றே ரஷ்யா தொடர்ந்து கூறி வந்தது.

உக்ரைன் போர்
இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கி ரஷ்ய ராணுவம் அதன் பிறகு தரைவழி தாக்குதலையும் தொடங்கின. மேலும், உக்ரைன் நாட்டில் தொடர்ந்து முன்னேறி வந்த ரஷ்யா ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நுழைந்ததாகத் தகவல் வெளியானது. முதல் நாளில் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை ரஷ்யா அழித்து இருந்தது.

உலக நாடுகள்
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏற்கனவே, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க தொடங்கி விட்டன. இருப்பினும், இதற்கெல்லாம் ரஷ்யா அஞ்சுவதாகத் தெரியவில்லை. ரஷ்யாவின் பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் யாராவது தலையிட்டால் இதுவரை கண்டிராத மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடம் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சீனா நிலைப்பாடு
உலகின் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவை எதிர்த்த போதிலும், எதிர்பார்த்தபடியே ரஷ்யாவின் நடவடிக்கையைச் சீனா எதிர்க்கவில்லை. மேலும், ரஷ்யா மீது சட்டவிரோதமாகப் பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடாது என எதிர்த்துள்ள சீனா, உக்ரைனில் பதற்றம் அதிகரிக்க அமெரிக்காவே காரணம் எனக் குற்றம் சாட்டியது, அதே நேரத்தில் அமைதியான முறையில் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தது.

முக்கிய ஆலோசனை
உக்ரைன் நாட்டில் இரண்டாவது நாளாக இன்றும் போர் தொடரும் நிலையில், இது தொடர்பாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைப்பேசி வழியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் உக்ரைனில் தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்து புதின் சீன அதிபரிடம் விளக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணும்படி ஜி ஜின்பிங் ரஷ்யா அதிபர் புதினிடம் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

என்ன கோரிக்கை
முன்னதாக, சற்று நேரத்திற்கு முன்பு தான், ரஷ்யா அதிபர் புதின் ஈரான், ஈராக் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் மீது மிக மோசமான பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. இதன் மூலம் சர்வதேச பொருளாதாரத்தில் ரஷ்யா தனித்து விடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படியொரு நிலை ஏற்படுவதைத் தவிர்க்கவே, ரஷ்யா உலக நாடுகள் மத்தியில் ஆதரவு திரட்டி வருகிறது. இந்தியாவிடம் கூட தங்களுக்கு ஆதரவாக இருக்கும்படி ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications