'எங்க நாட்டிலும் யுஎப்ஓ வலம் வருது' பகீர் கிளப்பிய சீனா..சுட்டு வீழ்த்த பிளான்? ஸ்டன் ஆன உலக நாடுகள்
சீனாவின் வான்பரப்பில் மர்மபொருள் ஒன்று பறப்பதாகவும், அதை சுட்டு வீழ்த்த அந்நாட்டு அதிகாரிகள் தயாராகி வருகிறார்களாம்.
பீஜிங்: அமெரிக்கா மற்றும் கனடா வான்பரப்பில் இதுவரை 4 மர்ம பொருள்கள் பறந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மர்ம பொருள்களை அமெரிக்க ஜெட் விமானங்கள் ஏவுகணைகள் வீசி வீழ்த்தின. சீனாவின் உளவு பலுனாக இருக்கலாம் என சந்தேகம் ஒருபக்கம் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது சீனாவிலும் இதேபோன்ற ஒரு மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் வான்பரப்பில் ராட்சத பலூன் பறந்த விவகாரம் சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக கடந்த 4 ஆம் தேதி கனடா எல்லையை ஒட்டியுள்ள மொன்டானா மாகாணத்தில் ராட்சத வெள்ளை நிற பலூன் ஒன்று பறந்து கொண்டிருந்தது.

உளவு பலூன் என குற்றச்சாட்டு
அந்த பலூன் சீனா அனுப்பிய உளவு பலூன் என்று குற்றம் சாட்டிய பென்டகன், பல ஆண்டுகளாக இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் சீனா உளவு பார்த்ததாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டியது. தொடர்ந்து பலூனையும் அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. உளவு பலூன் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த சீனா, வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்டது அந்த பலூன் என்றும் தவறுதலாக அமெரிக்க வான்பரப்பிற்குள் நுழைந்துவிட்டதாகவும் கூறி சமாளித்தது. சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தியது.

சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
இந்த பரபரப்புக்கு அடங்குவதற்கு முன்பாகவே கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் யுஎப்ஓ பறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனடியாக அதை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டார். ஜோ பைடன் உத்தரவையடுத்து சீறிபாய்ந்த அமெரிக்க ஜெட் விமானங்கள் மர்ம பொருளை சுட்டு வீழ்த்தின. கீழே விழுந்து கிடந்த மர்மப் பொருட்களின் பாகங்களை எடுத்து ஆய்வு செய்யும் பணிகளில் அமெரிக்க பாதுகாப்புத் துறை இறங்கியுள்ளது.

கனடாவிலும் பறந்த மர்ம பொருள்
இந்த நிலையில், அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில் மர்மப் பொருள் ஒன்று பறந்தது. கனடா வான்வழியில் பறந்த அந்த மர்மப் பொருளை அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சுட்டு வீழ்த்த உத்தரவிட்டார். இதையடுத்து, அமெரிக்க மற்றும் கனடா ராணுவங்கள் இணைந்து மர்ம பொருளை சுட்டு வீழ்த்தின. கனடாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த மர்ம பொருள் என்ன என்பதை அடையாளம் காண ராணுவ வீரர்கள் சேத பாகங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜோ பைடனுடன் ஆலோசனை
மர்ம பொருள் பறந்தது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா வான்பரப்பில் இன்றும் கூட ஒரு மர்ம பொருள் தென்பட்டது. அமெரிக்க-கனடிய எல்லையில் உள்ள ஹுரோன் ஏரிக்கு மேல் தென்பட்ட அந்த பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அடுத்தடுத்து சந்தேகத்திற்கிடமான மர்ம பொருள் பறந்து வருவது பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டு இருக்கிறது.

சீனா வான்பரப்பிலும் பறந்ததாக..
சீனாவின் மீதான சந்தேகமும் முழுமையாக அமெரிக்கவிற்கு நீங்கவில்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில், தங்கள் நாட்டு வான்பரப்பிலும் மர்ம பொருள் பறந்ததாக சீனா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சீன செய்தி நிறுவனங்கள் கூறுகையில், "சீனாவின் குயிங்டோவா பகுதியில் உள்ள கடல் பரப்பில் மர்ம பொருள் பறந்து சென்றுள்ளது. இதைக் கவனித்த அதிகாரிகள் சுட்டு வீழ்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டு வான்பரப்பு மீதே..
அமெரிக்கா மற்றும் கனடா மீது மர்ம பொருள் பறந்த விவகாரத்தில் சீனா மீதான சந்தேகம் இன்னமும் நீடிப்பதாக சர்வதேச பாதுகாப்பு வல்லுனர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், தங்கள் நாட்டு வான் பரப்பு மீதே மர்ம பொருள் பறப்பதாக சீனா கூறியிருப்பது உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications