மொத்தமாக புகையில் சிக்கிய மக்கள்.. சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து...பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு
பீஜிங்: சீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தின் யுசுய் மாவட்டத்தில் சின்யு நகரின் தெருவில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்டர்நெட் மையங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த வணிக வளாகத்தில் நேற்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தின் அடித்தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் வணிக வளாகம் முழுவதுமே புகை மூட்டமாகிவிட்டது..
பகல் நேரம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்காக வணிக வளாகம் வந்திருந்தனர்.. தங்களை சுற்றிலும் தீ பிடித்து எரிந்ததை பார்த்ததும் பொதுமக்களும் ஊழியர்களும் அலறி துடித்து அவசரமாக வெளியேறினார்கள்.. ஆனாலும், தீப்பற்றிய பகுதிகளில் ஏராளமானோர் உடனே வெளியே வரமுடியவில்லை.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது...
ஆனாலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.. மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், போலீசார் என 100க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதால் தொடர் பதற்றம் அங்கே நிலவி வருகிறது.
கடந்த 5 நாட்களுக்கு முன்புதான், இதே சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications