டிரம்ப்பை நேரடியாக எச்சரித்த சீனா! "அமெரிக்கா தனது தவறை திருத்தி கொள்ளவில்லை என்றால்.." வார்னிங்
பெய்ஜிங்: அமெரிக்கா சீனா இடையே கடந்த சில மாதங்களாகவே வர்த்தகப் பதற்றம் நிலவி வருகிறது. சீன பொருட்களுக்கு 155% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், சீனா இதற்குப் பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டிரம்பின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்புவதாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட அவர் சீனா மீது 155% வரிகளை விதிப்பதாகக் கூறியிருந்தார். சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் எல்லாப் பொருட்கள் மீதும் வரி விதிக்கப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ரேர் எர்த் மெடல்
அதாவது நவீனத் தொழில்நுட்பத்தில் எல்லாத் துறைக்கும் ரேர் எர்த் மெடல் தேவைப்படுகிறது. இப்போது ரேர் எர்த் மெடலை சீனா மட்டுமே பெருமளவு கட்டுப்படுத்தி வருகிறது. அதில் சீனா சில கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், இதனால் கடுப்பான டிரம்ப் வரிகளை விதிக்கப்போவதாக அறிவித்தார். இந்த வரி வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கிடையே டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவில் உள்ள சீன தூதர் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்கா தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் சீனா தனது உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.
சீனா எச்சரிக்கை
இது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள சீனத் தூதர் சூ வெய் கூறுகையில், "அமெரிக்காவின் இந்த வர்த்தகப் போர் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது. நாங்கள் எந்த மோதலையும் விரும்பவில்லை. ஆனால், எங்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளினால் நிச்சயமாகப் பதிலடி கொடுப்போம். நாங்கள் போராடுவோம், ஆனால் எங்கள் கதவுகள் பேச்சுவார்த்தைக்குத் திறந்தே இருக்கின்றன.
தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள்
வர்த்தகத்தில் இரு நாடுகளுக்கும் (அமெரிக்கா சீனா) இடையே ஒத்துழைப்பு தேவை. அதுவே இரு நாடுகளுக்கும் நன்மையைக் கொடுக்கும். இதையே தான் நாங்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம். அமெரிக்கா தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் சிக்கல்களைத் தீர்க்க முடியும். அப்படிச் செய்யாவிட்டால், சீனா தனது உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இதுவே எங்கள் நிலைப்பாடு!
சீனாவுடன் மட்டுமல்ல.. அமெரிக்கா இந்தியா இடையே கூட இப்போது சிக்கல் நிலவி வருகிறது. அமெரிக்கா இந்தியா இடையேயும் ஒத்துழைப்பு தேவை. எந்தவொரு ஒத்துழைப்பும் நன்மையையே கொடுக்கும். மோதல் என்பது எல்லாருக்கும் அனைவருக்கும் தீங்கு தான் விளைவிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா இந்தியா உறவு
சீன தூதர் சொன்னது போலவே சீனாவுக்கு அடுத்து, அமெரிக்காவின் வரிகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும் இதன் காரணமாகவே உக்ரைன் போர் தொடர்வதாகவும் சொல்லி, இந்தியா மீது டிரம்ப் 50% வரியை அறிவித்தார். இதனால் இந்தியா அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாகவே நல்லுறவு இல்லை.
இருப்பினும், இந்தியா அமெரிக்கா உறவு கடந்த சில நாட்களாக மெல்ல மேம்பட்டு வருகிறது. தீபாவளியன்று தான் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாகவும், பெரும்பாலும் வர்த்தகம் குறித்தே இருவரும் பேசியதாக டிரம்ப் கூறினார். ஒரு நாள் கழித்து, தீபாவளி வாழ்த்துகளுக்கு அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இருப்பினும், உரையாடலின்போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications