அமெரிக்கா நினைத்தே பார்க்காத சம்பவத்தை செய்த சீனா.. டிரம்புக்கு ஜி ஜின்பிங் கொடுத்த ஷாக்
பீஜிங்: அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறி வரி யுத்தம் நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா நினைத்தே பார்த்திறாத வகையில் சீனா பெரிய சம்பவம் ஒன்றை செய்துள்ளது. சீனாவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வரும் அமெரிக்காவுக்கு மிகவும் அரிதாக கிடைக்க கூடிய முக்கியமான தனிமங்கள் மற்றும் உலோகங்களை ஏற்றுமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரியுத்தம் நடைபெற்று வருகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீதம் வரியை டிரம்ப் விதித்துள்ளார். அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்ததால், அந்த நாட்டின் மீது கடுமையான வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்காவின் மிரட்டலை எல்லாம் கண்டு கொள்ளாத சீனா பதிலுக்கு 125 சதவிகித வரியை அமெரிக்கா மீது விதித்துள்ளது.

ஏற்றுமதி செய்ய சீனா தடை
இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் மீது விதித்த பரஸ்பர வரியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், சீனா மீதான வரியை மட்டும் நிறுத்தி வைக்கவில்லை. இப்படி சீனாவுக்கு கடும் நெருக்கடியை அமெரிக்கா கொடுத்து வரும் நிலையில், சீனா அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதாவது, மிகவும் அரிதாக கிடைக்க கூடிய முக்கியமான தனிமங்கள் மற்றும் உலோகங்களை ஏற்றுமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.
அதாவது, ஏற்றுமதிக்கான புதிய வரைவு விதிகளை சீனா வகுத்து வருகிறது. புதிய கொள்கைகள் வகுக்கப்படும் அதே வேளையில், கார்கள் முதல் ஏவுகணைகள் வரை பெரும்பாலான பொருட்கள் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் காந்தங்களின் ஏற்றுமதி பல துறைமுகங்களில் நிறுத்தப்படலாம் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னர், அமெரிக்கா ராணுவ ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய சில நிறுவனங்களுக்கு இத்தகைய பொருட்கள் கிடைப்பதை நிரந்தரமாக தடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு வரி விவகாரத்தில் கடுமையான நெருக்கடியை கொடுத்து வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே சீனாவின் இந்த செயல் இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. உலகில் மிகவும் அரிதாக கிடைக்க கூடிய கனிமங்கள் 90 சதவீதம் சீனாவில் இருந்து கிடைக்கிறது. இதில் 17 வகையான தனிமங்கள் பாதுகாப்பு, மின்சார வாகனங்கள், எரிசகதி பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.
சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் தொடர்பான பொருட்களும் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவை பொறுத்தவரை பெரும்பாலன விநியோகங்கள் சீனாவில் இருந்தே வருகின்றன. எனவே, சீனாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
அனைத்து நாடுகளையும் பாதிக்கும்?
இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கனிமங்களுக்கு மட்டும் இன்றி காந்த பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகளும் இடம் பெற்று இருக்கும் எனவும் இதற்கு மாற்றை கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமான காரியமாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகள் மோதி வரும் நிலையில், சீனாவின் இந்த தடை அமலுக்கு வந்தால் அமெரிக்க உற்பத்தி நிறுவனங்கள் தடுமாறும் நிலை ஏற்படக்கூடும்.
தற்போது, சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் உலோகங்கள், காந்த பொருட்கள் சிறப்பு ஏற்றுமதி உரிமம் பெற்றே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறதாம். சீனாவின் இந்த நடவடிக்கை அனைத்து நாடுகளுக்குமான ஏற்றுமதியையும் பாதிக்க கூடும். கனிம பொருட்களில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவின், தற்போதய நடவடிக்கை தன்னிடம் உள்ள கனிம பொருட்களை ஆயுதமாக பயன்படுத்தும் நடவடிக்கைக்கு ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.
90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்கா பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே விகிதத்தில் பரஸ்பரமாக வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, கடந்த 2 ஆம் தேதி எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை சதவீதம் வரி என்று டிரம்ப் அறிவித்தார். இந்த வரிவிதிப்பு 9 ஆம் தேதி அமலுக்கு வரும் என்று அறிவித்தார். டகாஸ்கர் மீது 47 சதவீதம், வியட்நாம் மீது 46 சதவீதம், தைவான் மீது 32 சதவீதம், தென்கொரியா மீது 25 சதவீதம், ஜப்பான் மீது 24 சதவீதம், ஐரோப்பிய கூட்டமைப்பு மீது 20 சதவீதம் என அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி அமலுக்கு வந்தது.
அரிக்காவுக்கு பதிலடியாக, சீனாவும் வரி விதித்தது. டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு 9 ஆம் தேதி அமலுக்கு வந்ததும், இந்தியா உள்பட உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்தன. வரி விதிப்பு தொடர்பாக பல்வேறு நாடுகளும் பேச்சுவார்த்தை கோரியதால் வரி விதிப்பை தற்காலிகமாக 90 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளார். சீனாவுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications