பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை!
பெய்ஜிங்: பாலைவனத்தில் அணு ஆயுதங்களை பதுக்கி வைக்கும் பங்கர்களை சீனா டபுளாக்கியிருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இது இந்தியா உட்பட மொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கிழக்கு சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பாலைவனப் பகுதியில், சீனா தனது மிக நீண்ட தூரம் பாயும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகளை வைத்துள்ள நிலத்தடிச் சேமிப்புக் கிடங்குகளுக்கு அருகே மாபெரும் ராணுவ உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருவதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் பங்கர்கள்
சின்ஜியாங் பகுதியில் உள்ள 'ஹாமி' அணுஆயுத ஏவுகணைக் கிடங்குகளுக்கு அருகே சீனா நூற்றுக்கணக்கான புதிய ஏவுதளங்கள், கவசப் பாதுகாப்பு பங்கர்கள் மற்றும் அதிநவீனத் தகவல் தொடர்பு மையங்களை உருவாக்கி வருகிறது.
குறிப்பாக, நடமாடும் ஏவுகணை வாகனங்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை பேட்டரிகளை நிறுத்துவதற்காக 80-க்கும் மேற்பட்ட பிரத்யேக கான்கிரீட் தளங்களை சீனா அமைத்துள்ளது.
ராணுவ தளங்கள்
கடந்த 6 ஆண்டுகளில் ஹாமி அணுஆயுத ஏவுகணைக் கிடங்கில் இருந்து முறையே 140 கி.மீ மற்றும் 230 கி.மீ தொலைவில் இரண்டு மாபெரும் அஷ்டகோண வடிவ ராணுவ மையங்களை சீனா கட்டமைத்துள்ளது.
இந்த அஷ்டகோண அமைப்புகளுக்குள் ராணுவ வீரர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள், பிரம்மாண்ட ராணுவ வாகனங்களை நிறுத்தும் இடங்கள், பலப்படுத்தப்பட்ட ஆயுதக் கிடங்குகள் மற்றும் அவசர காலத்திற்குப் பயன்படுத்த ஏர்ஃபீல்டுகள் மற்றும் ரயில் பாதைகள் இணைக்கப்பட்டுள்ளன.
மின்னணு போர்முறை
இந்த ரகசியப் பாலைவனத் தளங்களில் சீனா மின்னணு போர்முறை, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் அதிநவீனக் கட்டளை செயல்பாட்டு மையங்களை அமைத்து வருவதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், இந்த அஷ்டகோண தளங்களைச் சுற்றிப் பெரிய ராணுவ கூடாரங்கள் மற்றும் பாலைவன நிறத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஏவுதளங்களில் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.
நோக்கம் என்ன?
சீனா தனது நிலத்தடி அணுஆயுத ஏவுகணைகளை அமெரிக்கா அல்லது பிற எதிரி நாடுகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவும், அவசரக் காலத்தில் உடனடியாகத் திருப்பித் தாக்க ஏதுவாகவும் இந்த கடினமான உள்கட்டமைப்பு விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் சீனா தனது அணுஆயுதக் கட்டமைப்பை மிக வேகமாக நவீனமயமாக்கி வருவது உலக அளவில், குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications