ஆரம்ப விலை வெறும் ரூ.15..அதிரடி ஆஃபர் அறிவித்த வணிகவளாகம்- சல்லிசல்லியாக நொறுக்கிய பாகிஸ்தான் மக்கள்
கராச்சி: பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் 50 சதவீதம் ஆஃபர், அனுமதி இலவசம் என்று கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், திறக்கப்பட்ட அரை மணி நேரத்தில் வணிக வளாகத்தையே பொதுமக்கள் சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருள்களை அள்ளிச் சென்றது மட்டுமல்லாமல் வணிக வளாகத்தையே சல்லி சல்லியாக நொறுக்கியுள்ளனர்.
பொதுவாகவே ஆஃபர் என்றாலே மக்கள் உற்சாகமாகி விடுவார்கள். ஆடி ஆஃபர், அதிரடி ஆஃபர், பொங்கல் ஆஃபர், தீபாவளி ஆஃபர் என தள்ளுபடி எனும் வார்த்தையை கேட்டாலே மக்கள் குஷியாகி விடுவார்கள். பெரும்பாலான வணிகர்களின் வெற்றிக்கு காரணமாக அமைவதே அவர்கள் அளிக்கும் தள்ளுபடிதான். இந்த தள்ளுபடிகள் பண்டிகைக்கு பண்டிகை மாறுபடுவது வழக்கம்.

அந்த வகையில், வெளிநாட்டில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரால் கராச்சியில் திறக்கப்பட்ட பிரம்மாண்டமான வணிக வளாகத்தில், 50 சதவீத தள்ளுபடி, அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்ட ஒரே காரணத்தால் லட்சக்கணக்கானோர் வணிகவளாகத்தின் முன்பு குவிந்ததோடு மட்டுமல்லாமல், வணிக வளாகம் திறக்கப்பட்ட அரை மணி நேரத்தில் அங்கிருந்த மொத்த பொருட்களையும் ஆட்டையபோட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெளிநாட்டில் வசித்து வரும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் டிரீம் பஜார் என்ற பெயரில் பிரம்மாண்டமான மெகா மால் ஒன்றை திறந்தார். இந்த மாலை மிகுந்த செலவு செய்து கட்டிய அவர் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்க ஏற்பாடு செய்திருந்தார்.
வணிக வளாகம் திறக்கப்படுவதையொட்டி, அனைத்துப் பொருட்களுக்கும் 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது. தள்ளுபடி மட்டுமல்லாமல் திறப்பு விழாவின் முதல்நாள் என்பதால் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்றும் அறிவித்திருந்தனர். இந்திய மதிப்பின்படி பொருள்களின் ஆரம்ப விலை 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை பார்த்தவுடன் வணிக வளாகத்துக்கு முன்பு பொதுமக்கள் குவியத் தொடங்கினர். பிற்பகல் 3 மணியளவில் கடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே வணிக வளாகத்துக்கு முன்பு சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர். கடை திறக்கப்பட்டதும் பொதுமக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மாலுக்குள் நுழைய முயன்றதால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அச்சமடைந்த பாதுகாவலர்கள் அவர்களை எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பொதுமக்கள் அடித்துப் பிடித்து மாலுக்குள் நுழையத் தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து, அங்கிருந்த பாதுகாவலர்கள் சிலர் கூட்டத்துக்குள் புகுந்து கட்டைகளைப் பயன்படுத்தி பொதுமக்களை நுழையவிடாமல் தடுத்தனர். ஆனால், பெருவெள்ளம்போல் மக்கள் சூழ்ந்ததால் பாதுகாவலர்களை தள்ளிவிட்டுவிட்டு முண்டியடித்துக் கொண்டு வணிக வளாகத்துக்குள் புகுந்தனர். அங்கிருந்த அனைத்துப் பொருள்களையும் ஆளாளுக்கு எடுத்துக் கொண்டு வெளியேறத் தொடங்கினர்.
கிடைத்தவரை லாபம் என்று நினைத்து அத்தனை பொருள்களையும் சுருட்டிக் கொண்டு ஜெட் வேகத்தில் கிளம்பினர் பொதுமக்கள். அரை மணி நேரத்துக்குள் அதாவது 3 மணிக்குத் திறக்கப்பட்டு மூன்றரை மணிக்குள் மொத்த வணிகவளாகமும் காலியானது. வணிகவளாக பொறுப்பாளர்கள், பாதுகாவலர்கள், பணியாளர்கள் என்ன நடக்கிறதென்று தெரியாமல் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதுகுறித்து, வணிக வளாக பொறுப்பாளர்கள் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகவல் தெரிவித்திருந்த நிலையில் ராணுவம் வருவதற்கு முன்பே வணிக வளாகம் சூறையாடப்பட்டிருந்தது. பாகிஸ்தான் ராணுவம் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் மொத்த கூட்டமும் கலைந்து சென்றது. பாகிஸ்தான் மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்களை கொடுக்கப்பதற்காக திறக்கப்பட்ட இவ்வளவு பெரிய வணிக வளாகத்தை அரை மணி நேரத்தில் பொதுமக்கள் சூறையாடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications