ஃபைல்ஸ் தேங்கிடக்கூடாது.. அமெரிக்காவில் இருந்தாலும் அசராமல் வேலையில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்! ஆஹா!
சிகாகோ: அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தபடியே பணிகளை கவனித்து வருகிறார். அரசு சார்ந்த ஃபைல்கள் முதல்வரின் ஒப்புதல் கையெழுத்துக்காக தேங்கிவிடாமல், அங்கிருந்தபடியே e-office முறையில் ஒப்புதல்களை அளித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோ நகருக்கு சென்றுள்ளார். முன்னதாக, சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த முதலீட்டாளர் சந்திப்பில் நோக்கியா உள்ளிட்ட 8 நிறுவனங்களுடன் 4,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.1300 கோடி மதிப்பிலான முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
சான் பிரான்சிஸ்கோ நகரில் பயன்பாட்டில் இருக்கும் ஓட்டுநர் இல்லா தானியங்கி காரில் பயணித்த வீடியோவையும் முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோ நகருக்குச் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், மாலை வேளையில் சிகாகோ நகரின் கடற்கரையில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்.
சிகாகோவில் தொழில் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து முதலீடுகளை ஈர்த்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அஸ்யூரண்ட், ஈட்டன், ட்ரில்லியன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் சுமார் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
மேலும், சென்னை, கோவையில் விஸ்டியன் நிறுவனம் சார்பில் ரூ.250 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி மையம் நிறுவப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மையத்தை நிறுவ ரூ.100 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்த்து வரும் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் நடைபெறும் விஷயங்களையும் உடனுக்குடன் அறிந்து, ஆலோசனைகளை வழங்கி வருகிறார். சென்னையில் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகளுடன் பேசி உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், பொறுப்பு முதலமைச்சராக யாரும் நியமிக்கப்படவில்லை. அமெரிக்கா சென்றாலும் கட்சியையும் ஆட்சியையும் கவனித்துக்கொண்டே தான் இருப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் அரசு கோப்புகள், முதல்வரின் ஒப்புதலுக்காக தேங்கிவிடாமல் அமெரிக்காவில் இருந்தபடியே பணிகளை மேற்கொண்டு வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
e-office முறையில் ஒப்புதல்களை அளித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வரின் முதன்மை தனி செயலர் உமாநாத் ஐ.ஏ.எஸ், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அரசு கோப்புகளை டேப் வழியாக காட்ட, அவர் அவற்றை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன.அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது..." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications