“இம்ரான் கான் எனும் நான்” கிரிக்கெட்டின் முதல் பந்து To அரசியலின் கடைசி பந்து வரை.. கடந்து வந்த பாதை
இஸ்லாமாபாத் : ஒரு வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக வலம் வந்து பல நாட்டு வீரர்களை தனது ஆட்டத்தால் கதிகலங்க வைத்த பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் இம்ரான் கான் , இன்று தனது சொந்த நாட்டில் அரசியல் விளையாட்டில் அவுட்டாகி உள்ளார்.
ஆக்ஸ்போர்டில் படித்தது முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் வரை இம்ரான் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.. இம்ரான் கான் நியாசி என முழு பெயர் கொண்ட இம்ரான் கானை 80'ஸ் கிட்ஸ்களும், 90'ஸ் கிட்ஸ்களும் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியாது.
கபில்தேவ், கவாஸ்கர், சச்சின், பிரைன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் போல் அந்த காலத்திலேயே கிரிக்கெட்டில் ஒரு கலக்கு கலக்கியவர். சுமார் இருபது ஆண்டுகாலம் அதாவது 1971 முதல் 1992 வரை பாகிஸ்தான் அணிக்காக ஆடிய இம்ரான் கான் அந்த கால கட்டத்தில் ஒரு தலை சிறந்த ஆல்ரவுண்டர்.

கிரிக்கெட் வாழ்க்கை
1971 ஆம் ஆண்டில் எட்ஜ்பஸ்டனில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், அதன் பிறகு கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்தார். 1982 முதல் 1992 ஆம் ஆண்டு வரையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த அவர், 1992 பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என களத்தில் இவர் சீறும் சிங்கமாக வலம் வந்தவர். 18வது வயதில் பாகிஸ்தான் தேசிய அணியில் இடம்பெற்று முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். ஒரு கதாநாயகனுக்கான தோற்றம் அனல் பறக்கும் வேகப்பந்துவீச்சு, பேட்டிங்கில் அதிரடி என திகழ்ந்த இம்ரான் கான் பாகிஸ்தான் மக்களையும் தாண்டி உலகத்தையும் கவர்ந்தார். 1982ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இம்ரான் கான் பொறுப்பேற்ற பிறகு பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தது.

அரசியல் பயணம்
1992ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும், பாகிஸ்தானின் தனிப்பெரும் ஸ்டாராக உயர்ந்த இம்ரான் கான்,1996ஆம் ஆண்டு பாகிஸ்தான் தெஹரீக் இன்சாஃப் என்ற கட்சியை தொடங்கினார்.
பாகிஸ்தான் அரசியல் களத்தில் இம்ரான் கான் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த போது முதல் தேர்தலில் அவரும், அவரது கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலில் தான் இம்ரான் கான் எம்பியாக தேர்வானார்.

பெரும் பின்னடைவு
2007ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் முஷாரப்பால் இம்ரான் கான் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். அவரது அரசியலுக்கு பல தடைகள் உருவாக்கப்பட்டன. தடைகளைத் தாண்டிபுதிய பாகிஸ்தானைப் படைப்பேன் என்றார் இம்ரான். 2013 பொதுத் தேர்தலில் இம்ரான் கான் கட்சி 2வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இம்ரானின் வளர்ச்சியை தடுக்க அவருக்கு எதிராக அரசியல் அரங்கில் காய்கள் நகர்த்தப்பட்டன. இம்ரான் கானின் தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து இம்ரான் தனது மதகுருவையே மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர். இது இம்ரான் கானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானின் பிரதமர்
பின்னர் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தால் தனது பதவியை இழக்க, ஆளும் கட்சி மீது மக்களிடையே அதிருப்தி எழந்தது அதை அறுவடை செய்யும் முயற்சிகளில் இறங்கினார் இம்ரான். அதன் பலனையும் அவர் அடைந்தார். ஊழலில்லா பாகிஸ்தான் என்ற முழக்கத்தோடு தேர்தலில் களமிறங்கிய இம்ரான் கானை மக்களும் ஏற்றுக் கொண்டனர். ஏறத்தாழ தனிப்பெரும்பான்மையுடன் பாகிஸ்தானின் 19வது பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்றுக் கொண்டார். நன்றாக போய்க்கொண்டிருந்த அவர் அரசியல் வாழ்வில் விதி மீண்டும் விளையாட தொடங்கியது.

அரசியல் சிக்கல்
இம்ரானின் தவறான அரசியல் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொளைகளால் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாகவும், விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர் என்ற அஸ்திரத்தை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்தன. இதனை தடுப்பதற்காக எவ்வித முயற்சிகளையும் செய்யாத இம்ரான்கான் மீது இது தொடர்பாக குற்றம் சாட்டி எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த மாதம் 8ஆம் தேதியன்று பாகிஸ்தான் நாடளுமன்ற சபாநாயகரிடம் எதிர் கட்சி எம்பிகள் வழங்கினர்.

களத்தில் உறுதி
அடுத்த அடியாக கூட்டணி கட்சிகளும், சொந்த கட்சி எம்.பிக்களுமே எதிராக திரும்ப இம்ரானின் நிலைமை கேள்விக்குரியானது. பாகிஸ்தான் வரலாற்றி எந்த பிரதமரும் முழுமையாக ஆட்சியில் இருந்தது இல்லை என்ற வரலாறு மீண்டும் திரும்புமா என கூறப்பட்ட நிலையில், " கடைசி பந்து வரை அடித்து ஆடுவேன்" என உறுதியாக நின்றார் இம்ரான் கான். ஞாயிற்றுக் கிழமை இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில், அதிரடி திருப்பமாக இவ்விவகாரத்திம் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம்சாட்டி துணை சபாநாயகர் காசிம் சூரி நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்தார்.

நாடாளுமன்றம் கலைப்பு
மேலும் இம்ரான் கானின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி தேசிய சட்டமன்றத்தை கலைத்ததோடு காபந்து பிரதமராக இம்ரான் கானே நீடிப்பார் எனவும், 3 மாதங்களில் அங்கு மீண்டும் தேர்தல் நடக்கும் என கூறப்பட்டது. இதற்கிடையில் 195 உறுப்பினர்களின் ஆதரவுடன் PML-N தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமராக எதிர்க்கட்சி அணி அறிவித்தது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீண்டும் செல்லுபடியாக்கும் வகையில் சபாநாயகராக அயாஸ் சாதிக்கும் நியமிக்கப்பட்டார்.

உலக அளவில் எதிர்பார்ப்பு
சட்டசபை கலைக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார் தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல். அப்போதுதான் பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக , இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இல்லை என பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அறிவித்தார். இதனால் சொன்னது போலவே பதவியை இழந்தார் இம்ரான் கான். இதனிடையே காபந்து பிரதமராக குல்சார் அகமதுவை நியமிக்க இம்ரான் பரிந்துரைக்க, எதிர்க் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளன. கிரிக்கெட்டைப் போல் அரசியல் அடித்து ஆடுவாரா இம்ரான் கான் என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications