டெல்டா கொரோனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும்.. வேக்சின் போடாதவர்களை அதிகம் தாக்குகிறது.. WHO பகீர் தகவல்
ஜெனீவா: டெல்டா கொரோனா வகை தற்போது சுமார் 100 நாடுகளுக்குப் பரவியுள்ளதாகவும் இந்த வகை கொரோனா வரும் காலங்களில் உலகில் டெல்டா கொரோனா ஆதிக்கம் செலுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா இதற்கு முக்கிய காரணம் எனச் சொல்லப்பட்டது.
இந்நிலையில், வரும் காலங்களில் உலகில் டெல்டா கொரோனா ஆதிக்கம் செலுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

96 நாடுகளில் டெல்டா கொரோனா
இது பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பல நாடுகளில் முறையான sequencing செய்யப்படுவதில்லை என்பதால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம். இந்த நாடுகளில் நோய் பரவலும், மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

ஆதிக்கம் செலுத்தும்
மற்ற வகை கொரோனாவை விட இது அதிவேகமாகப் பரவுகிறது. இதனால் வரும் காலங்களில் உலகில் இந்த வகை கொரோனா ஆதிக்கம் செலுத்தும். அதேநேரம் தனிமனித இடைவெளி, தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி உள்ளிட்டவை மூலம் டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்தலாம். டெல்டா வகையைக் கவலைக்குரிய கொரோனாவாக பட்டியலிட்டுள்ளோம். எனவே, வேக்சின் அதிகம் செலுத்தப்படாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீண்ட காலம் அமல்படுத்த வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வேகமாகப் பரவும்
முன்னதாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், "டெல்டா வகை கொரோனா பற்றிப் பல நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன. நாங்கள் இதனைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ்களில் இந்த டெல்டா வகை கொரோனா தான் மிக வேகமாகப் பரவுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்கள் மத்தியில் இது மிக வேகமாகப் பரவுகிறது" என்றார்.
Recommended Video

உருமாறிய கொரோனா
பிரிட்டன் நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனா இதுவரை 172 நாடுகளுக்குப் பரவியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட பீட்டா வகை கொரோனா 120 நாடுகளிலும், பிரேசில் நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட காமா வகை 72 நாடுகளிலும் பரவியுள்ளது. இந்தியாவில் அதிதீவிர பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை 96 நாடுகளுக்குப் பரவியுள்ளது. ஜூன் 21 முதல் 27 காலகட்டத்தில் பிரேசில் நாட்டில் தான் வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது.












Click it and Unblock the Notifications