"15 நாளில் அணு ஆயுதம்".. ஈரான் மீது அமெரிக்கா இன்று திடீரென தாக்கியது ஏன்? பகீர் பின்னணி
டெஹ்ரான்: ஈரானின் அணுஆயுத திட்டத்தை முடக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இன்று அமெரிக்கா என்ட்ரி கொடுத்தது. ஈரானின் 3 யுரேனியம் செறிவூட்டும் மையங்களை குறிவைத்து அமெரிக்கா குண்டுகளை வீசி அழித்துள்ளது. 2 வாரத்துக்கு பிறகு தான் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று டிரம்ப் கூறிய நிலையில் இன்று திடீரென்று தாக்கியது ஏன்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் இன்று 10வது நாளை எட்டி உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி உள்ளது. இதுவரை இஸ்ரேலுக்கு ஆதரவு மட்டுமே வழங்கி வந்த அமெரிக்கா திடீரென்று ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது பற்றி இன்னும் 2 வாரங்களுக்கு பிறகு தான் முடிவு எடுக்கப்படும். ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம். இல்லாவிட்டால் தாக்குதல் நடத்தப்படாமல் இருக்கலாம் என்று டிரம்ப் தெரிவித்தார். ஆனால் திடீரென்று ஈரான் மீது இன்று அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.
ஈரானின் மூன்று அணுசக்தி திட்டங்களுக்கான தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் உள்ளிட்ட இடங்களில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது பி 2 பாம்பர்ஸ் போர் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது.
இன்று அதிகாலையில், அமெரிக்கா B-2 ஸ்டெல்த் பாம்பர்ஸ் போர் விமானங்களை பயன்படுத்தி 13,600 கிலோ எடையுள்ள GBU-57A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர் (MOP) எனும் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இது வெடிப்பதற்கு முன்பு 200 அடி வரை சென்று ஊடுருவி வெடிக்கும். அப்படித்தான் இந்த 3 யுரேனியம் செறிவூட்டும் தளத்தை இன்று அமெரிக்கா அழித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் என்பது ஈரான் அணுஆயுதம் தயாரிக்க இஸ்ரேலும், அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்து வருவது தான். அணுஆயுதம் தயாரிக்க யுரேனியத்தை 90 சதவீதம் வரை செறிவூட்ட வேண்டும். ஈரான் ஏற்கனவே 60 சதவீதத்துக்கு மேலாக செறிவூட்டி உள்ளதாக கூறப்பட்டது. இதனால்விரைவில் ஈரான் அணுஆயுதம் தயாரிக்கலாம் என்பதால் இஸ்ரேல் அதன் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஈரானின் அணுஆயுத திட்டத்தை முடக்கும் நோக்கத்திலும் அமெரிக்காவும் இன்று தாக்கி உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது ஈரானில் ஃபோர்டோ என்ற அணுசக்தி நிலையம் உள்ளது. இது யுரேனியத்தை செறிவூட்டும் மையமாகும். இது மலைக்கு நடுவே பூமிக்கடியில் 30 முதல் 300 அடி வரை துளையிட்டு பாதாள அறையுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலில் சேதமடையாத வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடம் உள்பட 3 அணுசக்தி நிலையம் மீது தான் அமெரிக்கா தனது பி2 பாம்பர்ஸ் போர் விமானங்களை பயன்படுத்தி பங்கர் பஸ்டர் குண்டுகளை யூஸ் செய்து தாக்குதல் நடத்தி உள்ளது.
இதன் பின்னணி என்னவென்றால் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் படி, ஈரானின் ஃபோர்டோ தளத்தில் யுரேனியம் 83.7 சதவீதம் வரை செறிவூட்டி உள்ளது. அணுஆயுதம் தயாரிக்க 90 சதவீதம் செறிவூட்ட வேண்டும் என்பதால் ஈரான் அதனை விரைவில் எட்ட இருந்தது. இதற்கிடையே தான் இஸ்ரேல் உளவுத்துறை சார்பில் இன்னும் 15 நாட்களில் ஈரான் அணுஆயுதம் தயாரித்துவிடும் என்று எச்சரிக்கை செய்தது. இது அமெரிக்காவை யோசிக்க வைத்தது.
அதுமட்டுமின்றி ஃபோர்டோ தளத்தில் இருந்து ஈரான் தனது பொருட்களை அவசரஅவசரமாக இடம் மாற்றி உள்ளது. ஜூன் 19ல் 16 லாரிகளிலும், ஜூன் 20ம் தேதி இன்னும் பல லாரிகளும் அங்கு சென்றுள்ளது. இதுதவிர புல்டோசர்களும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்ததை செயற்கைகோள் படங்கள் உறுதி செய்தது. அதாவது அமெரிக்கா இந்த இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என்பதை ஈரான் முன்கூட்டியே உணர்ந்தது.
இதனால் அங்குள்ள பொருட்களை ஈரான் வேறு இடத்துக்கு லாரிகளில் அள்ளி சென்றது. இதனை செயற்கைகோள் படங்கள் உறுதி செய்தன. இதையடுத்து தான் உடனடியாக அமெரிக்கா ஈரானுக்குள் நுழைந்து ஃபோர்டோ அணுசக்தி தளத்தை குறிவைத்து தாக்கி உள்ளது. இது ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே கிட்டத்தட்ட 120 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஈரானின் அணுஆயுத திட்டத்தில் இந்த இடம் மிகவும் முக்கியம். இதனால் ஃபோர்டோ உள்பட 3 யுரேனியம் செறிவூட்டும் மையங்களை குறிவைத்து தாக்கி உள்ளது அமெரிக்கா.












Click it and Unblock the Notifications