ஆப்கானிஸ்தான்.. அதிரடியாக முன்னேறும் தாலிபான்களுக்கு முட்டுக் கட்டை போட ரெடியாகும் "தளபதிகள்"
காபூல்: அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் முக்கியமான பகுதிகள் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஈரான் பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளை ஒட்டியுள்ள எல்லைப்புற பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
Recommended Video
இதன் மூலமாக தாலிபான்களுக்கு பண வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டு எல்லையிலுள்ள குவாலா என்ற பகுதியும் தற்போது தாலிபான்கள் வசம் வீழ்ந்துள்ள முக்கிய பகுதியாகும்.
இந்த செய்திகளில் மிக முக்கியமானதும் ஆச்சரியப்படத்தக்க தகவல் என்னவென்றால் மிகவும் வடக்கு தூரப் பகுதியாக படக்ஷான் மாகாணம் தாலிபான்களிடம் வீழ்ந்து விட்டது என்பதுதான். வடக்கு மண்டலத்தில் எப்போதுமே அமெரிக்க படைகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் அது இப்போதுதான் வீழ ஆரம்பித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வீழ்ச்சியடையும் பகுதிகள்
1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை தாலிபான்கள் ஆட்சி நடத்தியபோது கூட இந்த பிராந்தியம் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் செல்லவில்லை. அப்போது அவர்கள் அதை கைப்பற்றி இருப்பது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது என்கிறார்கள் வெளிவிவகாரத்துறை நிபுணர்கள். இது ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் கோட்டையாக இருந்தது.

அமெரிக்காவால் பயிற்சி பெற்ற ராணுவம் சரண்
இன்னொரு தகவலும் முக்கியமாக பார்க்கப்படுகிறது அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவம் தங்களிடம் நிபந்தனையற்ற வகையில் சரணடைந்து தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து வருவதாக கூறப்படுகிறது. ஆப்கன் தேசிய ராணுவம் என்பது அமெரிக்க படைகளால் சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டு போர்ப் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு ராணுவம். இவர்கள் தாலிபான்களிடம் சரணடைவது முக்கியமாக பார்க்கப்படுகிறது .ஆப்கானிஸ்தான் அரசு முற்றிலுமாக கையறுபட்ட நிலையில் இருப்பதை இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.

உள்ளூர் தளபதிகள்
இப்போது தாலிபான்களுக்கு எதிராக எழுப்பக்கூடிய குரல் என்றால் அந்த நாட்டில் ஆங்காங்கே உள்ள பயங்கரவாத குழுக்கள்தான். இவர்கள் ஏற்கனவே பல்வேறு போர்களில் பங்கேற்றவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் என்று கருதக்கூடிய இடங்களை தாலிபான்கள் கைப்பற்றி விடக்கூடாது என்பதால் அவர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். இதில் ஒருவர், ஜெனரல், முகமது தாவுத் கான். 1973ம் ஆண்டு முதல் சோவியத் ரஷ்யாவுடன் நெருக்கத்தில் இருந்தவர்.

வலிமையான தளபதிகள்
இன்னொருவர், குல்புதீன் ஹெக்மத்யார். இவர் என்றென்றும் உயிர் வாழ்பவர் என்று அழைக்கப்படக் கூடியவர். சிறு வயதிலிருந்தே ஒரு இஸ்லாமியவாதி. சோவியத்-ஆப்கானிஸ்தான் போரின்போது அவர் ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் வந்தார். 90களில் சிவில் போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷ்ய ஆதரவு அதிபர் நஜிபுல்லா அகற்றப்பட்ட பிறகு, ஏவுகணைகளை காபூல் நகருக்குள் ஏவியவர். இதனால் பலத்த சேதங்களுக்கு காரணமாக இருந்தவர். முகமது அட்டா நூர். இவர் வட பிராந்தியத்தில் பலமானவர். பால்க் மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர். ஆப்கானிஸ்தானின் வலிமையான கட்சிகளில் ஒன்றான ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவராக, அவர் வடக்கு மண்டலம் முழுவதும் செல்வாக்குடன் உள்ளார்.

துருக்கியிலிருந்து வரும் தளபதி
இது தவிர ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றங்கள் மற்றும் பாலியல் பலாத்காரங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட உஸ்பெக் போராளித் தலைவர் அப்துல் ரஷீத் தோஸ்தம், ஒருவர். இவர் தற்போது துருக்கியில் உள்ளார். தாலிபான்களுக்கு எதிராக போரிட அவர் விரைவில் ஆப்கன் திரும்ப உள்ளாராம். "நான் பல ஆண்டுகளுக்கு முன்பே இதை கணித்தேன். அனைத்து மாவட்டங்களும் எதிர்ப்பின்றி தலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் இதன் பின்னணியில் உள்ள திட்டம் என்னவென்று எனக்குத் தெரியாது, "என்று அவர் ஒரு பேட்டியில் கூறினார்.

ஹெரத்தின் சிங்கம்
முகமது இஸ்மாயில் கான்: 'ஹெரத்தின் சிங்கம்' என்று அழைக்கப்படும் ஜமாத்-இ-இஸ்லாமிய தலைவர் இவர். ஹெராத்தில் உள்ள தலிபான்களுக்கு எதிராக எதிர்ப்பை உருவாக்கி, முக்கிய மாவட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக கைப்பற்றி வருகிறார். இஸ்மாயில் கான் 2000 களின் முற்பகுதியில் அமெரிக்க தலிபான் எதிர்ப்பு கூட்டணியில் ஒரு பகுதியாக இருந்தார். அப்துல் கானி அலிபூர்: மைதான் வர்தாக்கைச் சேர்ந்த ஒரு ஹசாரா மேலதிகாரி. அவரது போராளிகள் தாலிபான் மற்றும் ஆப்கானிய அரசுக்கு எதிரானவர்கள். ஷியா நம்பிக்கையின் காரணமாக ஆப்கானிஸ்தானில் மிகவும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரில் ஒருவரான ஹசாரஸ், அவருக்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆப்கன் போர்
அப்துல் ரசூல் சயாஃப்: இவர், ஒரு பஷ்டூன் போராளி, அவர் ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன் பிரிவான இத்தேஹாத்-அல்-இஸ்லாமியை தலைமை தாங்கியவர். தாலிபானுக்கு பிந்தைய ஆப்கானிஸ்தானில் ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதி இவர். அதிபர் அஷ்ரப் கானியுடன் நெருக்கமானவர். சூடான் வெளியேற்றிய பிறகு, ஒசாமா பின்லேடனை ஆப்கானிஸ்தானுக்கு முதன்முதலில் அழைத்த நபர் இவர்தான் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications