டிரம்பின் நெருங்கிய நண்பருக்கு 27 ஆண்டுகள் சிறை.. சாகும் வரை வெளியே வர முடியாதாம்! என்ன காரணம்?
பிரேசில்: அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரும் பிரேசில் நாட்டின் மாஜி அதிபருமான ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ல் பிரேசில் நாட்டில் தேர்தல் நடந்த நிலையில், அந்த தேர்தலில் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். இருப்பினும், தோல்வியை ஏற்காமல் அவர் கலகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப், சர்வதேச அளவில் வலதுசாரி முகமாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வலதுசாரி தலைவர்களும் கூட தாங்கள் டிரம்பின் ஆதரவாளர்கள் என வெளிப்படையாகவே சொல்வார்கள். மேலும், பல வலதுசாரி தலைவர்கள் டிரம்ப்புடன் நட்பையும் வைத்துள்ளனர்.

ஜெய்ர் போல்சனாரோ
அப்படி டிரம்ப் உடன் நட்பைக் கொண்டவர் தான் பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ.. இவர் கடந்த 2019 முதல் 2023 வரை பிரேசில் நாட்டின் அதிபராக இருந்தார். அப்போது தான் அவருக்கும் டிரம்பிற்கும் நட்பு ஏற்பட்டது. தீவிர வலதுசாரியான போல்சனாரோ அதிபராக இருந்தபோது பிரேசிலில் பல சர்ச்சை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
27 ஆண்டுகள்
இதற்கிடையே 2022 இறுதியில் பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவருக்கு இப்போது 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதிக்கப்பட்டுள்ளது.. போல்சனாரோ ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அவரது சிறை காலம் தொடங்குவதாக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் டி மோரேஸ் தெரித்துள்ளார்.
போல்சனாரோ கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். அவரை கண்காணிக்க அவரது காலில் கண்காணிப்பு கருவியும் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த கருவியை உடைக்க முயன்றதாகச் சொல்லிக் கடந்த சனிக்கிழமை தான் போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது தனக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக எல்லாம் போல்சனாரோ கூறியிருந்தார். இருப்பினும், அதை ஏற்க மறுத்த நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கடுமையான தண்டனை
தீவிர குற்றச்சாட்டில் போல்சனாரோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால்.. அவருக்கு வேறு கைதிகளுடன் எந்தத் தொடர்பும் இருக்காது. 12 சதுர மீட்டர் மட்டுமே கொண்ட அறையில் அவர் அடைக்கப்படுவார். அதில் அவருக்கு ஒரு படுக்கை, தனி குளியலறை, ஏசி, டிவி மற்றும் மேசை வழங்கப்படும். இருப்பினும், வெளியாட்களின் தொடர்பு இருக்காது.
போல்சனாரோ ஏற்கனவே எல்லா மேல்முறையீடுகளையும் செய்துவிட்டார். இருப்பினும், எதிலும் அவருக்குச் சாதகமான ஒரு தீர்ப்பு வரவில்லை. உடல்நிலையை காரணமாகக் காட்டி போல்சனாரோவை வீட்டுக்காவலில் அடைக்க அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதையும் நீதிபதி நிராகரித்துவிட்டனர்.
என்ன புகார்
கடந்த 2022 இறுதியில் பிரேசில் நாட்டில் தேர்தல் நடந்தது. அதில் போல்சனாரோ தோல்வி அடைந்தார். இருப்பினும், தோல்வியை ஏற்க மறுத்து அவர் சர்வாதிகார ஆட்சியை நிறுவ முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதற்காக அவர் அதிபராக தேர்வான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, துணை ஜனாதிபதி ஜெரால்டோ அல்க்மின் மற்றும் நீதிபதி டி மோரேஸ் ஆகியோரை கொல்லவும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
போல்சனாரோவுக்கு இப்போது 70 வயதாகிறது. அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முழு தண்டனையை அவர் அனுபவித்தால் சாகும் வரை அவர் வெளியே வரவே முடியாது என கூறப்படுகிறது.
டிரம்பின் நண்பர்
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டை போல்சனாரோ தொடர்ந்து மறுத்தே வருகிறார். அதேபோல அமெரிக்க அதிபரான டிரம்பும் தனது நண்பர் மீதான நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். போல்சனாரோவை காலி செய்யவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சாடினார்.












Click it and Unblock the Notifications