பாகிஸ்தானே வெளியேறு.. ஆப்கானில் வெடித்த போராட்டம்.. மக்கள் மீது தாலிபான் சரமாரி துப்பாக்கி சூடு!
காபூல்: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது தாலிபான்கள் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்று இருந்தாலும் இன்னும் முழுமையாக தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைக்கவில்லை. அங்கு ஆட்சியின் உச்சபட்ச தலைவராக முல்லா ஹைபதுல்லா அகுண்ட்சாடா தேர்வு செய்யப்பட உள்ளார். இவர்தான் நாட்டின் அனைத்து அதிகாரமும் கொண்டாட உச்சபட்ச தலைவர். இது போக நாட்டிற்கு பிரதமர் அல்லது கவுன்ஸில் தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்.
இதற்குத்தான் தாலிபான்களுக்கு இடையில் மோதல் நிலவி வருகிறது. அங்கு தாலிபான்களின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான முல்லா காணி பராதர் அல்லது அனாஸ் ஹக்கானி ஆகிய இரண்டு பேரில் ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பேருக்கும் இடையில் பிரதமர் பதவியை பெறுவதில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.

மோதல்
இதில் பாகிஸ்தானின் ஈடுபாடு அதிகம் உள்ளது. பாகிஸ்தான்தான் தாலிபான்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது. தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெரும்பாலான தாலிபான்கள், அதன் தலைவர்கள் எல்லோருமே பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்தான். தற்போது தாலிபான்களை வைத்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் நிழல் ஆட்சி நடத்தும் முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவர் பைஸ் ஹமீத் காபூலுக்கு சென்று அங்கு ஆட்சியை உறுதி செய்வது குறித்து பேசி வருகிறார்.

ஆட்சி
தாலிபான்கள் குழுவில் இருக்கும் தீவிரமான பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு உயர் பதவிகளை பெற்றுத்தர பாகிஸ்தான் முயன்று வருகிறது. முல்லா காணி பராதர், அனாஸ் ஹக்கானி இரண்டு பேருமே பாகிஸ்தான் ஆதரவாளர்கள்தான். ஆனாலும் ஹக்கானி தீவிரமான பாகிஸ்தான் அனுதாபி என்பதால் அவரை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது. இதை பராதர் குழு விரும்பவில்லை என்பதால்தான் அங்கு பிரதமரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தாலிபான்கள் மோதல்
இதனால் தாலிபான்களுக்கு உள்ளேயே கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளது. தாலிபான் படைகள் இப்படி மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானின் இந்த தலையீட்டிற்கு எதிராக அங்கு மக்கள் போராடி வருகிறார்கள். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் மூக்கை நுழைக்க கூடாது என்று கூறி காபூலில் மக்கள் போராடி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் மக்கள் எப்போதும் வெளிநாட்டு ஆதிக்கத்தை விரும்ப மாட்டார்கள் என்பதே வரலாறு. இப்படி இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் அதிகாரம் செலுத்த நினைப்பதும், தங்களுக்கு விருப்பமான நபர்களை ஆட்சிக்கு கொண்டு வர நினைப்பதையும் ஆப்கான் மக்கள் விரும்பவில்லை.
|
போராட்டம்
இதனால் காபூலில் இன்று மக்கள் பலர் பாகிஸ்தானுக்கு எதிராக போராடினார்கள். பல பெண்கள் உட்பட 100க்கும் அதிகமான நபர்கள் கூட்டம் கூட்டமாக வந்து காபூலில் போராட்டம் செய்தனர். காபூலில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகம் முன் இவர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். அங்கிருந்து பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தலைவர் தங்கி இருக்கும் காபூல் செரினா ஹோட்டல் வரை பேரணி நடத்தும் திட்டத்தில் இவர்கள் இருந்தனர். பாகிஸ்தான் ஒழிக.. பாகிஸ்தானே வெளியேறு என்று கோஷங்களை எழுப்பி மக்கள் இதுபோன்ற போராட்டங்களை நிகழ்த்தினார்கள்.

துப்பாக்கி சூடு
காபூலில் குவிக்கப்பட்டு இருக்கும் தாலிபான்கள் படைகள் போராட்டக்காரர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிலையில் வானத்தை நோக்கியும், போராட்டக்காரர்களை நோக்கியும் தாலிபான்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதா, யாராவது பலியானார்களா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அங்கு தொடர்ந்து தாலிபான் துப்பாக்கி சூடு நடத்தி வருவதால் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications