'பூமி கடிகாரம்'! டைனோசர்கள் அழிவும், மனிதர்களின் தோற்றமும்.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்!
வாஷிங்டன்: பூமியில் இதற்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் அழிந்ததாக இருக்கட்டும், அதை தொடர்ந்து மனிதர்கள் உருவானதாக இருக்கட்டும் எல்லாவற்றிற்கும் காரணம் வெளியில் நடக்கும் மாற்றம் கிடையாது. பூமிக்குள் நடக்கும் மாற்றம்தான் என்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த மாற்றங்களுக்கு காரணம் 'பூமி கடிகார' அமைப்புதான் என்றும் கூறியுள்ளனர்.
பூமியின் வரலாறு என்பது, நீண்ட காலத்திற்கு முன்னர் அழிந்துபோன உயிரினங்களின் படிம எச்சங்கள் மூலம் சொல்லப்பட்ட கதையாகும். பல நூற்றாண்டுகளாக, விஞ்ஞானிகள் இந்த எச்சங்களைப் ஆய்வு செய்து பூமியின் காலவரிசையை ஒன்றிணைத்து வருகின்றனர். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி ஒரு ஆச்சரியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.

அதாவது பூமியின் பல்லுயிர் பெருக்கம் ஒரு ஆழமான, டெக்டோனிக் கட்டுப்பாட்டில் உள்ள சுழற்சியால் இயக்கப்படலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வு, 'கம்யூனிகேஷன்ஸ் எர்த் அண்ட் என்விரான்மென்ட்' எனும் இதழில் வெளியாகியுள்ளது.
பூமி இதுவரை 5 பெரிய பேரழிவுகளை சந்தித்திருக்கிறது. இவற்றில் பெரும்பாலான பேரழிவுகள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கின்றன. சில, விண்கல் மோதல் காரணமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் விஞ்ஞானிகள் இந்த பேரழிவுகளுக்கு இடையில் ஓர் ஒற்றுமையை கண்டுப்பிடித்திருக்கிறார்கள். பூமிக்கு வெளியில் நடக்கும் நிகழ்வுகளால் பேரழிவுகள் ஏற்படுவதில்லை என்றும், பூமிக்குள் நடக்கும் மாற்றங்களால்தான் பேரழிவுகள் ஏற்படுகிறது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உதராரணத்திற்கு டெக்டோனிக் நகர்வுகள் பூமியின் மேற்பரப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனால் எரிமலை வெடிப்புகள் அதிகரித்து, வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளியேறுகின்றன. இது உலக வெப்பநிலையை உயர்த்தி, கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதகமான சூழலை உருவாக்குகிறது. மேலும், கடலில் ஆக்சிஜன் அளவு குறைவதால், கடல் அனோக்ஸியா எனப்படும் நிலை ஏற்பட்டு, உயிரின அழிவுக்கு வழிவகுக்கிறது.
ஆக டெக்டோனிக் பிளேட்டுகளின் நகர்வுகள்தான் பூமியில் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் பேரழிவு ஏற்படுகிறது. இந்த டெக்டொனிக் நகர்வுகள் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது என்பதைதான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, பூமி குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை தன்னை தானே ரீபிரஷ் செய்துக்கொள்கிறது.
டெக்டோனிக் தட்டுகள் நகரும் போது மலைகள் மற்றும் எரிமலைகள் உருவாகின்றன. இதனால் கடல் வேதியியல் மாற்றம் அடைகிறது. பெர்மியன்-கடைசி அழிவு மற்றும் கிரெட்டேசியஸ்-கடைசி அழிவு போன்ற நிகழ்வுகள் இதற்கு உதாரணமாகக் கூறப்படுகின்றன.
டெக்டோனிக் செயல்பாடுகள் உலகளாவிய அளவில் பரிணாம வளர்ச்சியை பாதிக்கின்றன. இந்த சுழற்சிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தையோ அல்லது இனத்தையோ மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் உயிரினங்களின் பெருக்கத்தையும் அழிவையும் கட்டுப்படுத்துகின்றன.
விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், டெக்டோனிக் நகர்வுகள் கடலின் வேதியியல் மற்றும் காலநிலையை நேரடியாக மாற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்புகள் அதிகரிக்கும் போது வளிமண்டலத்தில் CO2 அளவு அதிகரிக்கிறது. இதனால் உலக வெப்பநிலை உயர்ந்து, கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பெரிய அளவிலான அழிவுகள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களை பூமி கடிகாரம் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications