துருக்கியில் திடீர் நிலநடுக்கம்.. ஜன்னல் - பால்கனி வழியாக கீழே குதித்த மக்களால் பரபரப்பு
அங்காரா: துருக்கி மத்திய தரைக்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கிய நிலையில் உயிரை காப்பாற்ற பொதுமக்கள் ஜன்னல், பால்கனி வழியாக கீழே குதித்த சம்பவம் நடந்துள்ளது.
துருக்கியின் மத்திய தரைக்கடல் கடலோர நகரமாக இருக்கிறது மர்மாரிஸ். இன்று (ஜூன்3) அதிகாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.17 மணிக்கு வீடுகளில் மக்கள் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு கீழே விழுந்தன. கட்டடங்கள் குலுங்கின.
இதனால் பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இன்னும் சிலர் உயிருக்கு பயந்து ஜன்னல் மற்றும் பால்கனி வழியாக வெளியே குதித்தனர். இதில் 7 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனை துருக்கி பேரிடர் மேலாண்மை பிரசிடென்சி உறுதிப்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை பிரசிடென்சி ,‛‛அதிகாலை 2.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கியின் எல்லையில் உள்ள கிரிஸ் நாட்டின் தீவான் ரோட்ஸ் தீவிலும் உணரப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மர்மாிஸ் நகரின் ஆளுநர் இட்ரிஸ் அக்பியிக் கூறுகையில், ‛‛நிலநடுக்கத்தால் 7 பேர் காயமடைந்துள்னளர். இவர்கள் பால்கனி மற்றும் ஜன்னல் வழியாக வெளியே குதித்தவர்கள் ஆவார்கள். கவலைப்படும் அளவுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை'' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே தான் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அங்குள்ள கட்டடங்கள் குலுங்கியது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. அதில் மின்விளக்குகள் அங்கும் இங்கும் அசைவது, நிலநடுக்கத்துக்கு பயந்து பொதுமக்கள் பொதுவெளியில் வந்து நிற்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
2/
— GeoTechWar (@geotechwar) June 2, 2025
More Footage: M6.0 earthquake struck Dodecanese Islands-Turkey border region on June 2, 2025, at 23:17 UTC. Tsunami alert issued; residents urged to move to higher ground. No major damage reported yet. #deprem #sismo pic.twitter.com/jvYsm6pBVe
மேலும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவது இது முதல் முறையல்ல. துருக்கி அடிக்கடி நிலநடுக்கத்தில் சிக்கி வருகிறது. முன்னதாக கடந்த 2023ம் ஆண்டில் துருக்கியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 53 ஆயிரம் பேர் பலியாகினர். 11 மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications