இந்தியாவுக்கு ராணுவ வரைபடங்களை அனுப்பிய அமெரிக்க பெண் தொழிலதிபர் கைது
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க பாதுகாப்புத் துறை கான்டிராக்டரான ஹான்னா ராபர்ட் ராணுவ ஆயுதங்களின் ப்ளூபிரிண்டை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹான்னா ராபர்ட்(49). அமெரிக்க பாதுகாப்புத் துறை முன்னாள் கான்டிராக்டர். அவர் நியூ ஜெர்சியில் ஒன் சோர்ஸ் யு.எஸ்.ஏ. என்ற நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் இந்தியாவிலும் உள்ளது. இந்தியாவில் பி.ஆர். நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஒன் சோர்ஸ் நிறுவனம் செயல்படுகிறது.
இது தவிர அவர் நியூ ஜெர்சியில் கால்ட்வெல் காம்பனன்ட்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அவர் நியூ ஜெர்சியில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருக்கும் கம்ப்யூட்டரை பயன்படுத்தி அமெரிக்க ராணுவ ஆயுதங்களின் ப்ளூ பிரிண்ட் அதாவது மாதிரி வடிவ வரைபடங்களை சட்டவிரோதமாக இந்தியாவில் உள்ள தனது நிறுவனத்தை கவனிக்கும் பி.ஆர். நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தப்படும் டார்பீடோ சிஸ்டம்களின் பாகங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள், எப்-15 போர் விமானம் ஆகியவற்றின் வரைபடங்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு துறை ஹார்டுவேர்கள் மற்றும் பாகங்களை தயார் செய்து கொடுக்கலாம் என்பது தான் அவரின் திட்டம். இந்நிலையில் அவரின் திட்டம் அமெரிக்க போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து சட்டவிரோதமாக ராணுவ தொழில்நுட்ப தகவல்களை இந்தியாவுக்கு அனுப்பிய குற்றத்திற்காக ஹான்னா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஹான்னா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 கோடியே 52 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications