Exclusive: "இனி தூக்கமே வராது.. கதவு, ஜன்னல் இடிந்து விழுவது போல அதிர்ந்தது.." கத்தார் வாழ் தமிழர் பகீர்
கத்தார்: கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. கத்தாரில் அதிகளவில் இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அவர்களும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையே இந்தத் தாக்குதல் தொடர்பாக கத்தாரில் வாழும் தமிழர் புகழேந்தி நமது ஒன்இந்தியா தளத்திற்கு சில பிரத்தியேக தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஈரானில் உள்ள அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை திடீரென பங்கர் பஸ்டர் பாம்களை வீசியது. இது இஸ்ரேல் ஈரான் மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது. இந்தச் சூழலில் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் திங்கள் இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.

மக்கள் அச்சம்
இந்த தாக்குதலில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. கத்தாரின் பாதுகாப்பு அமைப்பு அந்த ஏவுகணைகளை அழித்ததாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்த தாக்குதலில் கத்தார் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக அங்கு இந்தியர்கள் அதிகளவில் வாழும் நிலையில், அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து கத்தாரில் வாழும் தமிழர் புகழேந்தி நமது ஒன்இந்தியா தளத்திற்கு சில பிரத்தியேக தகவல்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர், "இரவு திடீரென எங்களுக்குச் சத்தம் கேட்டது. என்ன சத்தம் என நாங்கள் வெளியே வந்து பார்த்தோம். ஏவுகணைகள் போய்க் கொண்டு இருந்தது. பார்க்க அது அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கிச் சென்று கொண்டு இருப்பது போல இருந்தது. அப்போது இவர்களின் பாதுகாப்பு சிஸ்டம் அதை இடைமறித்துத் தாக்கியது. அதை நாங்களே கண் கூடாக பார்த்தோம். ஏவுகணைகளைத் தாக்கி அழிப்பதைப் பார்க்க முடிந்தது.
கதவு, ஜன்னல் அதிர்ந்தது
முதலில் ஒரு ஆறு ஏவுகணைகள் பாய்ந்த சத்தம் கேட்டது. அது எங்கோ விழுந்தது போலத் தெரிந்தது. அப்போது கதவு, ஜன்னல் எல்லாம் ஆடியது.. அப்போது எல்லாரும் பயந்துவிட்டனர். திடீரென சத்தம் கேட்டதால் எனது மனைவி, குழந்தை ரொம்பவே பயந்து போனார்கள். அப்போது தான் நான் கீழே வந்து பார்த்தேன். ஏவுகணைகள் பாய்வதும், அவை இடைமறித்து அழிக்கப்படுவதையும் பார்க்க முடிந்தது.
எத்தனை ஏவுகணைகள் வந்தது எனத் தெரியவில்லை. ஆனால், தொடர்ச்சியாக ஏவுகணைகள் தாக்கின. கொஞ்ச நேரம் அப்படியே அந்த தாக்குதல் தொடர்ந்தது. அதன் பிறகே நின்றது.
எச்சரிக்கை எதுவும் இல்லை
அமெரிக்கத் தூதரகம் பிற்பகல் 3 மணியளவில் முன்கூட்டியே தனது குடிமக்களுக்கு ஒரு அலர்ட் கொடுத்திருந்தது. தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி அமெரிக்கத் தூதரகம் எச்சரித்திருந்தது. அந்த தகவல் மட்டுமே இங்கு எங்களுக்குக் கிடைத்தது. அதைத் தவிர வேறு எந்தவொரு எச்சரிக்கையும் கிடைக்கவில்லை. சத்தம் கேட்ட பிறகே இதுபோன்ற தாக்குதல் நடந்தது தெரிந்தது.
நாங்கள் வசிக்கும் இடத்தில் சைரன் எச்சரிக்கை எதுவும் இல்லை. ஏவுகணைகள் பாய்ந்து வரும் சத்தமும், அது இடைமறித்து அழிக்கப்படும் சத்தமும் மட்டுமே கேட்டது. எவ்வளவு ஏவுகணை எனத் தெரியவில்லை. ஆனால், பல ஏவுகணைகள் பாய்ந்தன. தாக்குதல் தொடருமா? அமெரிக்கா இங்கிருந்து பதிலடி தருமா எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறோம். ஒருவித பயத்தோடு தான் இருக்கிறோம்.
வான்வெளி மூடல்
இப்போது வரை அனைவரும் பாதுகாப்பாகவே இருக்கிறோம். நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் இருக்கிறது. அது கிட்டதட்ட பாலைவனம் போன்ற பகுதி. அருகே குடியிருப்பு பகுதிகள் எதுவும் இல்லை. இந்த தாக்குதலால் கத்தார் வான்வெளி மூடப்பட்டுள்ளது. அதை மீண்டும் எப்போது திறப்பார்கள் எனத் தெரியவில்லை. இதுபோன்ற தாக்குதலைப் பார்ப்பது இதுவே முதல்முறை. இதுவரை டிவியில் தான் இதுபோல பார்த்து இருக்கிறோம். தாக்குதல் முடிந்த பிறகும் எனக்கு இன்னும் பதற்றமாகவே இருக்கிறது.
தூக்கமே வராது
அவ்வளவு தூரத்தில் கேட்ட சத்தமே வலிமையாக இருந்தது. கதவு, ஜன்னல் அதிர்ந்த சத்தம் அவ்வளவு சத்தமாக இருந்தது. அந்த பதற்றம் அடங்கவே 20- 30 நிமிடங்கள் ஆகிவிட்டது. ஈரான் தாக்குதல் எதாவது மிஸ்ஸாகி குடியிருப்பு பகுதியில் விழுந்துவிடுமோ என்ற பயம் இருக்கிறது. இனி என்ன நடக்கும்.. இந்த பிரச்சினை எப்படிப் போகும் எனத் தெரியவில்லை. எப்படியும் மீண்டும் தாக்குதல் எதாவது நடக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. இதனால் எங்களுக்குத் தூக்கமே வராது" என்றார்.












Click it and Unblock the Notifications