சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இஃப்தார் சமய நல்லிணக்க நிகழ்ச்சி
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சனிக்கிழமை 10-06-2017 அன்று, சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு மற்றும் சமய இன நல்லிணக்க நிகழ்ச்சியை நடத்தியது.
சிங்கப்பூர் உள்துறை அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர், திரு. அம்ரின் அமின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். "உலகின் பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துவரும் சூழ்நிலையில், நாம் மிகுந்த கவனத்துடன் இருப்பது மட்டுமின்றி, சிங்கப்பூரில் சமூக இன நல்லிணக்க ஒற்றுமையைப் போற்றிப் பாதுகாப்பது பெரிதும் அவசியம். போதைப் பொருள்களுக்கு அடிமையாகி இருப்பவர்களை காப்பாற்றி, அவர்களை நல்வழிப் படுத்துவது நமது கடமை" என்றும் அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு சக்கர நாற்காலிகளை நன்கொடையாக, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் வழங்கியது.

சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர், "கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவு, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு" என்று தனது வரவேற்புரையில் நினைவு கூர்ந்தார். சிங்கப்பூர் புக்கிட் பாத்தோ தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முரளி பிள்ளை, நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் திரு. இரா தினகரன் மற்றும் பல சமூக அமைப்புகளின் தலைவர்களும், பல இன சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களும், சங்க உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் செயலாளர், கணிதப் பேராசிரியர் திரு. அமானுல்லாஹ் நிகழ்ச்சியை வழிநடத்தினார். ஒற்றுமையையும், சமய இன நல்லிணக்கத்தையும் பறைசாற்றிய வண்ணம், இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.












Click it and Unblock the Notifications