துர்க்வே ஆற்றிலிருந்து மாஜி கிரிக்கெட் வீரர் ‘ஆத்துக்கு’ வந்த 8 அடி முதலை
அராரே: ஜிம்பாவே நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரின் வீட்டு கட்டிலுக்கு அடியில் இருந்து சுமார் 8 அடி முதலை ஒன்று பிடிபட்டது.
நம்மூரில் அருகில் இருக்கும் புதரில் இருந்து எலி, பாம்பு போன்ற உயிரிகள் வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஜிம்பாவேயில் வாழ்ந்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரின் வீட்டில் புகுந்த முதலை ஒன்று அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீர் வரவைத்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்....
ஜிம்பாவே நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரான 40 வயது கெய் வெட்டல் தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் துர்க்வே ஆற்றில் இருந்து 2 கிமீ தொலைவில் தனது அலுவலகத்தோடு, குடியிருப்பையும் அமைத்து வசித்து வருகிறார்.

ஜன்னலில் நுழைந்த முதலை....
வழக்கம்போல பணிகளை முடித்து விட்டு நேற்று இரவு படுக்கச் சென்றுள்ளார் கெய். அப்போது அவரது அறைக்குள் சுமார் 8 அடி நீள முதலை ஒன்று ஜன்னல் வழியாக உள்ளே புகுந்துள்ளது.

அய்யய்யோ... முதலை....
இன்று காலை எழுந்து அலுவலகம் கிளம்பிய கெய் கட்டிலுக்கு அடியில் முதலை உறங்கியதைக் கவனிக்கவேயில்லை. ஆனால், அவரது வீட்டுப்பணிப்பெண் வீட்டை சுத்தம் செய்ய கட்டிலுக்கு அடியில் பார்த்த போது, முதலை இருந்ததைக் கண்டு பயத்தில் கூச்சல் போட்டுள்ளார்.

ஆற்றிலிருந்து ஆத்துக்கு வந்த முதலை....
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர் முதலையை சாமர்த்தியமாக பிடித்துச் சென்றனர். பிடிபட்ட முதலை அருகில் இருந்த துர்க்வே ஆற்றில் இருந்து தப்பி வந்த முதலையாக இருக்கலாம் என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

நல்லவேளை கெய் தப்பிச்சுட்டாரு....
நைல் நதியில் வாழும் வகையைச் சேர்ந்த இந்த முதலையின் எடை சுமார் 150 கிலோ எடை கொண்டது. மனிதர்களை கூட வேட்டையாடக் கூடியது என்று முதலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications