"கேம் இன்னும் முடியல.." அமெரிக்காவின் தாக்குதலுக்கு பிறகு ஈரான் சொன்ன வார்த்தை.. இது ரொம்ப முக்கியம்
தெஹ்ரான்: ஈரானின் அணு உலைகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்கா தாக்குதலை நடத்தியது. இதில் அணு உலைகள் அழிக்கப்பட்டதாகவே டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், இந்த தாக்குதலால் எதுவும் ஆகவில்லை என்றும் அணு உலையை மீண்டும் இயக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கமேனி உதவியாளர் பகீர் கருத்துகளைக் கூறினார்.
இஸ்ரேல் ஈரான் மோதலில் உள்ளே வந்த அமெரிக்கா, கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்கர் பஸ்டர் பாம்களை வீசியது. ஈரான் நாட்டில் உள்ள மூன்று முக்கியமான அணு உலைகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் 10 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்த நிலையில், அதில் அமெரிக்காவின் இந்த தாக்குதலே திருப்புமுனையாக இருந்தது.

கேம் இன்னும் முடியல
இதற்கிடையே அமெரிக்காவின் தாக்குதலால் மட்டும் கேம் இன்னும் முடியவில்லை என்றும் ஈரான் அதிபர் அலி கமேனியின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கூறியிருக்கிறார். ஈரானின் மூன்று அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய போதிலும், தங்கள் நாட்டில் போதுமான அளவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரது இந்த கருத்துகளைப் பேசுபொருள் ஆகியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா ராணுவம் ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகள் மீது கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. B-2 ஸ்டெல்த் விமானங்கள் மூலம் பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அமெரிக்காவின் இந்த தாக்குதலில் ஈரான் அணு உலைகள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தார்..
முகமது எஸ்லாமி
இந்த நேரத்தில் தான் அமெரிக்காவின் தாக்குதலால் தங்கள் யுரேனியத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
ஆலைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டோம். உற்பத்தி மற்றும் சேவையில் எந்தவொரு தடையும் இருக்காது. எங்களிடம் இன்னும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு உள்ளது. கேம் ஓவர் என நீங்கள் நினைத்தால்.. அது தவறு" என்றார்.
அமெரிக்கா சொல்வது என்ன!
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பிறகும் கூட ஈரானிடம் இன்னும் யுரேனியம் கையிருப்பில் இருப்பதை அமெரிக்க அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர். குறிப்பாக ஈரானிடம் இருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்திருந்தது. இது குறித்த கேள்விக்கு அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறுகையில், "இந்த விவகாரத்தில் அடுத்த சில வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
யுரேனியம் அணு உலைகளின் அடியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம். ஆனால், யுரேனியத்தை புதைப்பதுதான் எங்கள் நோக்கம். யுரேனியம் புதைக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணு ஆயுதமாக மாற்றும் திறனை ஈரான் இழக்கச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அதை நாங்கள் அடைந்துவிட்டோம்" என்றார்.
பின்னணி
கடந்த ஜூன் 13ம் தேதி இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் வெடித்தது. அணு ஆயுத பேச்சுவார்த்தையில் அமெரிக்கா உடன் உடன்பாடு எட்டாமல் ஈரான் இருந்த நிலையில், திடீரென இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. சுமார் 12 நாட்கள் இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. இந்தச் சூழலில் தான் நேற்று காலை டிரம்ப் இந்த மோதல் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார். அதன் பிறகு இஸ்ரேல், ஈரான் இரண்டு நாடுகளுமே போர் நிறுத்தம் வந்துவிட்டதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications