பணவீக்கம், அரசியல் குழப்பத்திற்கு நடுவே.. பாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு அதாவது வரும் ஜனவரியில் பொது தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக்வே குழப்பமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. அங்கு இம்ரான் கானுக்கு பிறகு ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக வந்த நிலையில், தற்போது பொருளாதார சூழல் மிக மோசமாக உள்ளது. குறிப்பாக வரலாறு காணாத வகையில், பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 300 ரூபாயை தாண்டி அதிர வைத்தது. அது மட்டும் இன்றி அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க அந்நாட்டில் 2022 வரை பிரதமராக இருந்த இம்ரான் கானும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்படி ஒருபக்கம் அரசியல் குழப்பமும் உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஷெபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையின் படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
அந்நாட்டின் சட்டப்படி அடுத்த 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதுவரை காபந்து அரசு பதவியில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இம்ரான் கான் சிறையில் இருக்கும் நிலையில், தேர்தலை நடத்தி முடிக்கவே இந்த நடவடிக்கையை அவர்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தானில் உள்ள காபந்து அரசை வழிநடத்த அந்நாட்டின் எம்பி அன்வர்-உல்-ஹக் கக்கர் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதலில் தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது, ஜனவரி மாதம் இறுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
