பாட்டை மாற்றச் சொன்ன கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற 2 டி.ஜே.க்கள்
குர்காவ்ன்: குர்காவ்னில் பாடலை மாற்றக் கூறியதால் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் டி.ஜே.க்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் ரோஹித் பரத்வாஜ்(22). குர்காவ்னில் உள்ள கிருஷ்ணா காலனியில் வசித்து வந்த அவர் திங்கட்கிழமை இரவு தனது நண்பன் அன்கித்தின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.
குர்காவ்ன் சுபாஷ் நகரில் வசிக்கும் அன்கித் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காலி இடத்தில் பார்ட்டி கொடுத்தார். பார்ட்டிக்கு 25 பேர் வந்திருந்தனர். டி.ஜே.க்கள் துரு, ராஜு ஆகியோர் பாடல்களை மாற்றி மாற்றி போட்டுக் கொண்டிருந்தனர். பார்ட்டிக்கு வந்தவர்கள் பாடல்களை கேட்டு ஆடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ரோஹித் பாட்டை மாற்றுமாறு கூறியுள்ளார். அதற்கு ராஜு, துரு மற்றும் அமித் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த 3 பேரும் ரோஹித்தை இழுத்துச் சென்று கட்டை, ஹாக்கி மட்டைகளால் அடித்து நொறுக்கினர். இதை பார்த்த அன்கித் ஓடிவந்து படுகாயம் அடைந்த ரோஹித்தை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து ரோஹித்தின் தந்தை தீபக் பரத்வாஜ் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அமித், ராஜு, துரு ஆகியோரை கைது செய்துள்ளனர்.
ரோஹித்தின் 23வது பிறந்தநாளை வரும் நவம்பர் 13ம் தேதி சிறப்பாக கொண்டாட நினைத்த நேரத்தில் அவரை இப்படி சின்ன விஷயத்திற்காக கொன்றுவிட்டார்களே என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications