H-1B விசா.. அவசரப்பட்ட டிரம்ப்.. இந்தியாவை விட அமெரிக்காவை அதிகம் பாதிக்கும்.. வெளியான ரிப்போர்ட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் பணியாளர்களுக்கான H-1B விசா கட்டணத்தை 100,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்த முடிவு செய்திருப்பது, இந்தியாவை விட அமெரிக்காவை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் என்ற அமைப்பு கூறியுள்ளது. மென்பொருள், கிளவுட் மற்றும் சைபர் பாதுகாப்பில் உள்நாட்டு திறனை வளர்ப்பதற்குத் திரும்பும் இந்தியர்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிய H-1B விசாக்களுக்கு 100,000 டாலர் என்று உத்தரவிட்டார். இது ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களிடையே, குறிப்பாக 70%க்கும் அதிகமான இந்தியர்களிடையே பெரும் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க வர்த்தகத் துறைச் செயலாளர் ஹொவர்ட் லூட்னிக், இந்த கட்டணம் ஆண்டுதோறும் வசூலிக்கப்படலாம் என்று அப்போது குறிப்பிட்டிருந்தார். மேலும் விவரங்கள் "இன்னும் பரிசீலனையில் உள்ளன" என்றும் பொத்தாம் பொதுவாக கூறியிருந்தார். இது அமரிக்காவில் உள்ள இந்தியர்களை அதிர வைத்தது.

அமெரிக்கா விளக்கம்
ஆனால் கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளைக் மாளிகை இந்த புதிய கட்டணம், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கெனவே H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு அல்ல என்றும் தெளிவுபடுத்தி அறிவிப்பு வெளியிட்டது. அதேபோல் வெளிநாட்டில் உள்ள தற்போதைய H-1B விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிற்கு மீண்டும் நுழையும்போது இந்த $100,000 கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை என்றும் அமெரிக்க தெளிவுப்படுத்தியது. H-1B விசா வைத்திருப்பவர்கள் வழக்கம்போல் நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் நுழையலாம். புதிய கட்டணம் அடுத்த H-1B சுற்றில் மட்டுமே பொருந்தும் என்றும் தற்போதைய விசா வைத்திருப்பவர்கள் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு அல்ல" என்றும் அமெரிக்கா விளக்கம் அளித்தது.
இந்தியா கவலை- டிரம்ப் விளக்கம்
அமெரிக்க அரசின் இந்த முடிவால் இந்தியாவிலிருந்து வரும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான விசா செலவை கடுமையாக அதிகரிக்கும் என்று இந்திய அரசு கவலை தெரிவித்திருக்கிறது. அதேநேரம் அமெரிக்க அதிபர் டிரம்ப், H-1B விசா முறை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும, இது "தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்" என்று கடுமையாக சாடினார்.
சம வாய்ப்பு இல்லை
இந்நிலையில் மைக்ரோசாஃப்ட், கூகுள், மெட்டா, அமேசான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் வங்கிகளும் தங்கள் H-1B ஊழியர்களை வெளிநாடு பயணம் செய்ய வேண்டாம் என்றும் உடனே நாடு திரும்புமாறும் அவசர அறிவிப்பு வெளியிட்டன. இதனிடையே டிரம்ப் நிர்வாகம் சர்ச்சைக்கு அளித்த விளக்கத்தில், அமெரிக்க ஊழியர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே என்று கூறியது. குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டு ஊழியர்களால் அமெரிக்க ஊழியர்கள் நீக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தது.
விசா ஒதுக்கீடு எப்படி
தற்போதைய நிலவரப்படி ஆண்டுதோறும் 65,000 H-1B விசாக்கள் ஒதுக்கப்படுகின்றன. அமெரிக்காவில் உயர் பட்டம் பெற்றவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. H-1B விசா ஒப்புதல்களை பொறுத்தவரை USCIS இணையதளத்தின்படி, 2025 நிதியாண்டில் (ஜூன் 30, 2025 வரை), அமேசான் 10,044 விசா ஒப்புதல்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. TCS (5,505) இரண்டாவது இடத்திலும், மைக்ரோசாஃப்ட் கார்ப் (5,189) மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.
இன்போசிஸ் ஹெச்சிஎல்
அதைத் தொடர்ந்து மெட்டா (5,123), ஆப்பிள் (4,202), கூகுள் (4,181), காக்னிசண்ட் (2,493), ஜேபி மோர்கன் சேஸ் (2,440), வால்மார்ட் (2,390), மற்றும் டெலாய்ட் கன்சல்டிங் (2,353) ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. டாப் 20 நிறுவனங்களின் பட்டியலில் இன்ஃபோசிஸ் (2,004), எல்டிஐமைண்ட்ரீ (1,807), மற்றும் ஹெச்சிஎல் அமெரிக்கா (1,728) ஆகியவையும் உள்ளன.
அமெரிக்காவை பாதிக்கும்
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் பணியாளர்களுக்கான H-1B விசா கட்டணத்தை 100,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்த முடிவு செய்திருப்பது, இந்தியாவை விட அமெரிக்காவை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் என்ற அமைப்பு கூறியுள்ளது.
புதிய வேலைகள் குறையும்
மேலும் அந்த அமைப்பு கூறுகையில், இந்திய ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவில் 50-80 சதவீதம் உள்ளூர்வாசிகளை, மொத்தம் சுமார் 100,000 அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. ஆகவே இந்த நடவடிக்கை பல புதிய வேலைகளை உருவாக்காது. அதற்கு பதிலாக, உள்ளூர்வாசிகளை பணியமர்த்துவதை விட இந்தியர்களை ஆன்-சைட்டில் பணியமர்த்துவது அதிக செலவை ஏற்படுத்தும்.
ஆன்சைட் பணிகள் அதிகரிக்கும்
தற்போதைய நிலையில் ஐந்து வருட அனுபவமுள்ள ஒரு ஐடி மேலாளர் அமெரிக்காவில் 120,000-150,000 அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கிறார், இது H-1B இல் 40 சதவீதம் குறைவாகவும் இந்தியாவில் 80 சதவீதம் குறைவாகவும் இருக்கிறது. தற்போது ஹெச்1பி விசா எடுக்க இந்த மிகப்பெரிய கட்டணத்தை எதிர்கொள்வதால், நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து தொலைதூரத்தில் இருந்து அதிக வேலைகளைச் செய்து, வெளிநாடுகளுக்குச் செல்வதை அதிகப்படுத்தும். அதாவது H-1B மனுக்கள் குறையும், உள்ளூர்காரர்களை பணியில் அமர்த்துவதும் நடக்காது.
இந்தியா என்ன செய்ய வேண்டும்
அதேநேரம் மென்பொருள், கிளவுட் மற்றும் சைபர் பாதுகாப்பில் உள்நாட்டு திறனை வளர்ப்பதற்குத் திரும்பும் இந்தியர்களை பயன்படுத்துவதன் மூலம் கட்டண உயர்விலிருந்து பயனடைய இந்தியா திட்டமிட வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்புவாத நடவடிக்கையை இந்தியாவின் டிஜிட்டல் "ஸ்வராஜ் மிஷன்"-க்கு நீண்டகால ஊக்கமாக மாற்ற வேண்டும்" என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் அமைப்பு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications