வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது அதிகரிக்கும் தாக்குதல்: போராட்டத்தில் குதித்த இந்து அமைப்புகள்
டாக்கா: வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், இதனை கண்டித்து அங்குள்ள இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான வங்காளதேசம் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாகும். இங்கு சமீப காலமாக மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக அங்கு வசிக்கும் இந்துக்களை குறிவைத்தும், அவர்களின் உடைமைகளை அடித்து நொறுக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருவது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்துக்கள் மீது தாக்குதல்
அந்த வகையில், கடந்த வாரம் லோஹங்கரா நகரில் உள்ள சகாபரா பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞர், இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி, ஒரு கும்பல் அங்குள்ள இந்துக்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இது குறித்து உள்ளூர் மக்கள் கூறும் போது, 'ஆகாஷ் ஷா என்ற இளைஞர் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் பதிவிட்டதாகவும் இதனால் அவரை கைது செய்ய வேண்டும் எனவும், ஆகாஷ் ஷா வீட்டின் முன்பு திரண்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் வீட்டில் இல்லாததால், அண்டை வீடுகளுக்கும் சென்ற கும்பல், அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்தததோடு, வீட்டிற்கும் தீ வைத்து எரித்தனர்" என்று கூறினர்.

ஆகாஷ் ஷாவின் தந்தை கைது
இந்த சம்பவம் வங்காளதேசத்தில் வசித்து வரும் சிறுபான்மையினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அங்குள்ள இந்து அமைப்புகள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டத்தை பதிவு செய்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பதற்றத்தை தணிக்க ஆகாஷ் ஷாவின் தந்தையை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆகாஷ் ஷா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணையம் கண்டனம்
இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக இந்து மதத்தை சேர்ந்த வாலிபர் மற்றும் அவர்சார்ந்த இந்துக்களை குறிவை தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு அந்நாட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மதசார்பற்ற ஒரு நாட்டில் சமூக கலவரங்களை எந்த சூழ்நிலையிலும் ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்த மனித உரிமைகள் ஆணையம், இது குறித்து விசாரணை நடத்தும்படி உள்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தியது.

அமைதியான முறையில் போராட்டம்
இந்த நிலையில், இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வங்காளதேசத்தில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் பங்கேற்றன. இந்து சமூகத்தினர் மீது நடைபெறும் தாக்குதல்களுக்கு எதிராகவும், இந்து ஆசிரியர் கொலை மற்றும் இந்து பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வங்காளதேசம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற இந்த போராட்டம் அமைதியான முறையில் நடந்தது.












Click it and Unblock the Notifications