வங்கதேச யுத்தத்தில் 93,000 வீரர்களுடன் பாகிஸ்தான் தளபதி சரணடைந்த சிலையை தகர்த்த பயங்கரவாதிகள்!
டாக்கா: வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு அந்நாட்டு விடுதலைக்காக இந்தியா யுத்தம் நடத்தி 93,000 வீரர்களுடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி சரணடைய வைத்த நிகழ்வைக் குறிக்கும் சிலையையும் வங்கதேச பயங்கரவாதிகள் தகர்த்து எறிந்துள்ளனர். உலக வரலாற்றிலேயே ஒரு யுத்தத்தில் ராணுவ தளபதியும் 93,000 வீரர்களும் சரணடைந்தது வங்கதேச விடுதலைக்காக இந்தியா நடத்திய பாகிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தில்தான் என்பது சரித்திரம்.. இந்த சரித்திர சாட்சியமான சிலையைத்தான் வங்கதேச மத பயங்கரவாதிகள் தகர்த்து எறிந்துள்ளனர்.
வங்கதேசத்தில் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் மூலம் வெற்றி பெற்று பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டன. இந்தியா எதிர்ப்பு, இடஒதுக்கீடு எதிர்ப்பு என்ற போர்வையிலான இந்தப் போராட்டங்கள் அதீத வன்முறைகளாக வெடித்தன. இதனால் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த போராட்டங்களின் உச்சமாக பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்தார். அவரது மாளிகையை வன்முறையாளர்கள் முற்றுகையிட்டதால் உயிருக்கு அஞ்சி வங்கதேசத்தை விட்டே தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார் ஷேக் ஹசீனா. அவருக்கு உலகின் பல நாடுகளும் அடைக்கலம் தர மறுத்துவிட்டதால் தற்காலிகமாக இந்தியாவில் தங்கி இருக்கிறார் ஷேக் ஹசீனா.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஒன்று அமைந்த போதும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழிய வன்முறைகள் வெறித்தனமாக தலைவிரித்தாடுகிறது. இந்து கோவில்கள் தாக்கப்படுவதும் இந்து அதிகாரிகள் அரசு பதவிகளில் இருந்து விரட்டியடிக்கப்படுவதும் தொடருகிறது.
வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடிய அந்த தேசத்தின் தந்தை முஜிபுர் ரகுமானின் சிலையை ஏற்கனவே தகர்தனர் வன்முறையாளர்கள். முஜிபுர் ரகுமானின் மகள்தான் ஷேக் ஹசீனா. முஜிபுர் ரகுமான் பாத்திரத்தில் நடித்த நடிகர்களையும் அடித்தே கொலை செய்தனர் பயங்கரவாதிகள்.
தற்போது, வங்கதேச விடுதலைக்கான யுத்தத்தின் சரித்திர சாட்சியாக இருந்த சிலையையும் இந்த வன்முறையாளர்கள் தகர்த்துள்ளனர். 1971-ம் ஆண்டுக்கு முன்னர் வரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக- கிழக்கு பாகிஸ்தானாகவே வங்கதேசம் இருந்தது. மொழி அடிப்படையில் கிழக்கு பாகிஸ்தானை பாகிஸ்தான் ராணுவம் ஒடுக்கி படுகொலை செய்தது. இதனால் வங்கதேச தனிநாடு விடுதலைப் போரை முஜிபுர் ரகுமான் நடத்தினார். அவருக்காக பாகிஸ்தானுடன் இந்தியா யுத்தம் நடத்தியது.
1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக பாகிஸ்தானுடன் இந்தியா நடத்திய யுத்தத்தால்தான் வங்கதேசம் என்ற ஒரு புதிய தனிநாடு உருவானது. அந்த யுத்தத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி தமது 93,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் இந்தியாவிடம் சரணடைந்தார். உலக யுத்த வரலாற்றிலேயே 93,000 வீரர்கள் சரணடைந்தது வங்கதேசத்தில் இந்தியா நடத்திய யுத்தத்தில்தான். இதனை வெளிப்படுத்தும் வகையில் டாக்காவில் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது வங்கதேசத்தில் மதவெறியர்கள் கை ஓங்கி இருக்கும் நிலையில் டாக்காவில் உலக யுத்த வரலாற்றின் பெருமிதமிக்க சாட்சியாக இருந்த இந்த சிலையும் தகர்க்கப்பட்டுவிட்டுள்ளது. இந்த சிலை தகர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர், இந்திய எதிர்ப்பாளர்கள்தான் இத்தகைய நாசகார வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என விமர்சித்துள்ளார். இந்திய கலாசார மையம், கோவில்கள், இந்துக்களின் வீடுகளைத் தகர்த்தவர்கள் இப்போது 1971-ம் ஆண்டு யுத்தத்தை நினைவூட்டும் சிலையையும் தகர்த்துள்ளனர் என வேதனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications