போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு நடுவே.. காசா மீது இஸ்ரேல் சரமாரி அட்டாக்.. தணியாத பதற்றம்
ஜெருசலேம்: கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த இஸ்ரேல் - காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருபக்கம் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் மற்றொரு பக்கம் காசா மீது இஸ்ரேல் சரமாரியாக வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. அவ்வப்போது இரு தரப்பும் மோதிக்கொள்ளும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் கண் மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், 1,200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 250 பேரை பணய கைதிகளாகவும் பிடித்து செல்லப்பட்டனர். இதனால் கோபத்தின் உச்சிகே சென்ற இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டாமல் விட மாட்டோம் என போர் தொடுத்தது. காசா மீது தரைவழியாகவும் வான்வழியாகவும் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. 15 மாதங்களுக்கு மேலாக நடைபெறும் இந்த போரில் இதுவரை சுமார் 46 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
வீடுகளை இழந்த லட்சக்கணக்கானோர் பாதுகாப்பு தேடி எல்லை பகுதியில் தஞ்சம் அடைந்தனர். காசாவில் பல இடங்கள் இருந்த இடம் தெரியாமல் சேதம் அடைந்தன. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்ததால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவியது.
போரை நிறுத்துவதற்காக கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன் பயனாக இருதரப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 20 ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் காசா மீது இஸ்ரேல் விடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதால் மகிழ்ச்சியில் காசாவில் உள்ள சாலைகளில் ஆடிப்பாடிய பாலஸ்தீனியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதல்களில் காசாவில் 115 பேர் கொல்லபட்டுள்ளனர். இதில் 28 குழந்தைகள், 31 பெண்கள் அடங்குவர். 265 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். போர் முடிவுக்கு தருவாயில் கூட இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி இருப்பது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications