"எப்பவும் Kingதான்!" ஜெயிலர் படம் பார்க்க ஜப்பான் டூ சென்னை பறந்து வந்த ஜோடி! தமிழில் பேசி அடடே மாஸ்
டோக்கியோ: ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி ஜெயிலர் படத்தைப் பார்க்க ஜப்பானில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டராக வலம் வருபவர் ரஜினிகாந்த். பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் வசூல் மன்னராக இருந்து வரும் ரஜினிகாந்த்தின் நடிப்பில் இன்று ஜெயிலர் திரைப்படம் ரிலீசாகிறது.

ரஜினிகாந்த்தின் முந்தைய படமான அண்ணாத்த ரசிகர்களைத் திருப்திப்படுத்தாத நிலையில், ஜெயிலர் படத்தை அவரது ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்தச் சூழலில் தான் ஜெயிலர் ரிலீசானது.
ஜெயிலர்: இந்தப் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். இவருக்கும் முந்தைய படமான பீஸ்ட் சரியாகப் போகவில்லை. இதனாலோ என்னவோ ஜெயிலர் படத்தின் புரோமேஷன்கள் பெரியளவில் இல்லாமலேயே இருந்தது. ஆனால், படத்தின் டிரைலர் வெளியான பிறகு அது முற்றிலுமாக தலைகீழாக மாறிப் போனது. ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
படத்திற்கான முன்பதிவு தொடங்கிய உடனேயே பல தியேட்டர்களில் காட்சிகள் ஹவுஸ்வுல் ஆனது. சில மணி நேரத்தில் பல ஆயிரம் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. சில தனியார் நிறுவனங்களும் ஜெயிலர் திரைப்படத்தை முன்னிட்டு முதல் நாள் விடுமுறை அளிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. அந்தளவுக்கு எங்குப் பார்த்தாலும் ஜெயிலர் திரைப்படம் குறித்தே தான் பேச்சு இருந்தது. அந்தளவுக்குக் கடைசி நேரத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
ஜப்பான் ரசிகர்கள்: இன்று படம் வெளியான நிலையில், இது இருவருக்கும் மாபெரும் கம்பேக்காக அமைந்துவிட்டது. படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களுமே பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்குப் படம் வெளியாகி இருக்கும் நிலையில், ரஜினி ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். மக்கள் வரவேற்பு பாசிட்டிவாக இருக்கும் நிலையில், ஜெயிலர் புது வசூல் சாதனையைப் படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சென்னையில் ஒரு சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ரஜினிகாந்த்திற்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்திற்கு எல்லையே இல்லை. மொழி, இனம், நாடுகளைக் கடந்தும் அவரது ரசிகர்கள் கொட்டி கிடக்கிறார்கள். 'ஜெயிலர்' படத்திலும் இப்போது மீண்டும் அதுவே நிரூபணமாகியுள்ளது. ரஜினிகாந்த்திற்கு ஜப்பான் நாட்டிலும் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தச் சூழலில் ஜெயிலர் திரைப்படத்தைப் பார்க்க ஜப்பானில் இருந்து ஒரு ஜோடி சென்னைக்கு வந்துள்ளனர். ஜப்பானிலும் ஜெயிலர் திரைப்படம் ரிலீசாகும் என்ற போதிலும், தமிழகத்தில் வந்து படம் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த தம்பதி அங்குள்ள ஒசாகாவிலிருந்து சென்னை வந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.
பஞ்ச் டையலாக்: இது குறித்த வீடியோவை பிடிஐ செய்தி நிறுவனம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதில் ரஜினியின் வெறித்தனமான ரசிகராக இருக்கும் ஜப்பானைச் சேர்ந்த யசுதா ஹிடெடோஷி தமிழில் பேசி ஆச்சரியப்படுத்தினார். அதில் அவர் ஜெயிலர் திரைப்படம் பார்க்கவே ஜப்பானில் இருந்து சென்னை வந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், "இங்கு நான் தான் கிங்.. நான் வைப்பது தான் ரூல்ஸ்.. ஹூக்கும்" என்று ரஜினியின் டையலாக்கையும் அட்டகாசமாகப் பேசினார்.
மேலும், முதலில் தான் முத்து திரைப்படத்தை பார்த்ததாகவும் அதன் பிறகு பாட்ஷா படத்தைக் கொண்டாடியதாகவும் தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாக ரஜினி படங்களைத் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வெறித்தனமான ஜப்பான் ரசிகரின் வீடியோ தான் இப்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications